Donnerstag, November 13, 2003

திசைகள்

கெளரவ ஆசிரியர்: மாலன் நவம்பர் 2003

சந்திரவதனாவின் வலைப்பூ மனஓசையிலிருந்து. . . .
24 September 2003

பொட்டு

பொட்டு வைப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும்? அதனால் என்ன பயன்?என்பவை பற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல், அம்மா வைத்துப் பழக்கிய பொட்டை நானும் தொடர்ந்து வைத்து வந்தேன்.

சின்ன வயசில் சின்னச்சீரகம் உட்பட மூலிகைகள் கொண்டு காச்சி வடித்து, சிரட்டையில் ஊற்றிக் காய வைத்த கறுத்தப் பொட்டை தண்ணீர் தொட்டு உரைத்து நெற்றியில் அம்மா வைத்து விடுவா. சின்னதாக கன்னத்திலும் ஒரு பொட்டுப் போட்டு விடுவா. அதனால் நெற்றிப் பொட்டின் நரம்புகள் குளிர்மையும் நன்மையும் பெறுமாம். அம்மாதான் சொல்லுவா.

வளர்ந்த பின் சிவந்த சாந்துப் பொட்டு. அது கூட மூலிகைகள் கலந்து செய்ததுதானாம். பயன் இருந்திருக்கும். அப்பா சொல்லுவார் பொட்டு வைத்திருக்கும் ஒரு பெண்ணை ஹிப்னோட்டிசவாதியால் ஒன்றுமே செய்ய முடியாதாம். சில ஆண்கள் தமது பார்வையின் வசீகரத்தால் தனியாகச் செல்லும் பெண்களை தமக்கு அடிமையாக்கி விடுவார்களாம். அப்படியான ஏமாற்று வேலை எல்லாம் பொட்டு வைத்த பெண்களிடம் கை கூடாதாம்.

திருமணத்தின் பின் குங்குமப் பொட்டு. அதுவும் மூலிகைகள் கொண்டு செய்த நல்ல பயன் தரு அரும் பொருளாம்.

ஆனால் வெளிநாட்டில் ஸ்ரிக்கர் பொட்டு. இதனால் என்ன பயன்? பல தடவைகள் யோசித்துப் பார்த்து ஸ்ரிக்கர் பொட்டு வைப்பதில் பயன் எதுவும் இல்லையென்பதால் பொட்டு வைப்பதை விட்டு விட்டேன்.

இன்று மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது 7 வயதுகள் நிரம்பிய மேல் மாடித் துருக்கியப் பெண்குழந்தை கீழே இறங்கி வந்து கொண்டிருந்தது.

என்னைக் கண்டதும் பல நாட்கள் கேட்க நினைத்து கேட்காமல் விட்டதை இப்போ கேட்பது போன்ற பாவனையில் ஏன் நீ இப்போ பொட்டு வைப்பதில்லை? என்று கேட்டது. சிரித்து விட்டு இப்போ எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்றேன்.

ம்....... நீ பொட்டோ டு எவ்வளவு வடிவாக இருப்பாய். நெற்றியில் சிவப்பாக ஒரு பொட்டு. அது அழகு...... உதடுகளை நெளித்து, நட்போடு சிரித்து அழகாகச் சொல்லிக் கொண்டு என்னைத் தாண்டி இறங்கிக் கொண்டு போனது.

ம்........... ஸ்ரிக்கர் பொட்டினால் என்ன பயன்..? இதுவோ...!

--------------------------------------------------------------------------------

சந்திரவதனாவின் எண்ணங்களை வாசிக்க:
http://manaosai.blogspot.com/

Keine Kommentare: