Donnerstag, Juni 01, 2006

சிலந்திவலை

வலைப்பதிவுலக மலரும் நினைவுகள் (2003 முதல் இன்று வரை)

Venkataramani
Saturday, May 20, 2006


ஆச்சரியமா இருக்கு. எனக்கும் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகால தொடர்பு இருந்திருக்கு. செப்டம்பர் 2003ல முதல் பதிவு போட்ட நான் எப்பவாவது ஒரு ரெண்டு பதிவு மட்டுமே போட்டிருந்தாலும், தமிழ் வலைப்பதிவுலகத்துல நடக்கறதையெல்லாம் கவனச்சுக்கிட்டு வந்திருக்கேன். ஆரம்பத்துல பத்து இருபது பேர் எழுதிக்கிட்டு இருந்ததுபோய் இன்னைக்கு தேதியில தமிழ்மணத்துல 800க்கும் மேற்பட்ட பதிவுகள் இருக்கு. அதுல சிலர் நிறைய பதிவுகள் வெச்சிருந்தாலும், என்னோட மென்பொருளின் கணக்குப்படி 500க்கும் மேற்பட்ட தனிநபர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்துக்குள்ள பதிய ஆரம்பிச்சவர்களுக்கு ஆரம்பகால நிகழ்வுகளை பத்தி தெரியாததுனால, என்னோட நினைவுகளை கிளறி சில சுவாரசியமான விஷயங்களை பத்தி எழுதலாம்னு தோணிச்சு.

முதல்ல தமிழ்ல வலைப்பதிய ஆரம்பிச்சவங்க யூனிகோட் பயன்படுத்தலை. TSCIIங்கற வேற என்கோடிங் உபயோகிச்சதால அவங்களோட பதிவை உலாவில சுலபமா படிக்கமுடியாம இருந்தது. அதனால நாங்க அதுக்காக ஒரு fontஐ நிறுவி படிக்கவேண்டியிருந்தது. அப்புறமாதான் யூனிகோட்ல பதிஞ்சா விண்டோஸ் 2000லயோ XPலயோ சுலபமா படிக்கலாம்னு கண்டுபிடிச்சாங்க. இதுக்கப்புறம்தான் நான் என் பதிவை ஆரம்பிச்சேன். அப்போதெல்லாம் வலைப்பதிவோட யூ. ஆர். எல் தெரிஞ்சாதான் போய் படிக்கமுடியும். யாராவது புது இடுகை போட்டாலும் தெரியாது. அதனால ஒவ்வொரு பதிவா போய் எதாவது புதுசா இருக்கான்னு பாக்கறது. அப்படியே நாம எதாவது புதுசா எழுதியிருந்தா அதுக்கு விளம்பரம் பண்ணிட்டு வரனும். ஒருத்தர் ரெண்டு பேராவது நம்மளோடதை படிக்கனுமே!

மொதல்ல எல்லாரும் சுவாரசியமா விவாதிச்ச விஷயம் என்ன தெரியுமா. blogங்கற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்னனுதான். வலைப்பூ-னாரு மாலன் கவித்துவமா. வலைப்பதிவு, வலைக்குறிப்பு இப்படில்லாம் நிறைய பேரு வெச்சாங்க. கருத்துக்கணிப்பெல்லாம் வெச்சி வலைப்பதிவுனு முடிவு செஞ்சாங்கன்னு நினைக்கறேன்.

மதி கந்தசாமி அவர்களுடைய முயற்சியால் Tamil Bloggers List என்ற இந்த பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. புதுசா பதிய வர்றவங்க இந்த பக்கத்துல அவங்க பதிவை அறிவிச்சா அது லிஸ்ட்ல சேர்த்துக்கப்படும். இதுவே எங்களுக்கு பெரிய வரப்பிரசாதமா இருந்துது. அப்புறம் வலைப்பூ சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் வலைப்பதிவுலகுல யார் யார் என்னென்ன சுவாரசியமா எழுதியிருக்காங்கன்னு சேகரிச்சு அதைப்பற்றிய விமர்சனத்தோட எல்லாருக்கும் அறிவிப்பார். இதில் ஆறாவது ஆசிரியராக காசி அவர்களுக்கு அடுத்து என்னை நியமித்தார் மதி. நான் வலைப்பூக்களில் நகைச்சுவை/பொழுதுபோக்கு, அறிவியல்/தொழில்நுட்பம் போன்ற சில தலைப்புகளில் எழுதியதை
இங்கே பார்க்கலாம்.
இந்த சஞ்சிகையின் archives படிச்சா அந்தகால (!) வலைப்பதிவுகளைப்பத்தி தெரிஞ்சுக்கலாம். அப்புறம் காசி அவர்கள் தமிழ்மணங்கற அற்புதமான வலைவாசலை அறிவிச்சாரு. அதுல இருந்து வலைப்பதிவுகளோட பொற்காலம் ஆரம்பமாச்சு.

மொதமொதல்ல சொந்தப்பெயர் இல்லாம வலைப்பதிவு ஆரம்பிச்சவர் முகமூடி தான்னு நினைக்கறேன். 'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால முகமூடி போட்டதா அவரோட பதிவின் தலைப்பு சொல்லுது. அடுத்து கண்டிப்பா சொல்லப்படவேண்டியவர் பெயரிலி. இவரோட தமிழ்ப்புலமையைப்பாத்து ஆச்சரியப்படற அதே சமயத்துல இவரோட நீளமான குழப்பறமாதிரியான வாக்கியங்கள பாத்து பயந்துட்டாங்க எல்லாரும். இவரோட அந்தகால பதிவு TSCIIல இருக்கறதால அதுக்குப்பதிலா இந்த யூனிகோட் பதிவை படியுங்க. உதாரணத்துக்கு அதுல இருந்து ஒரு வாக்கியம்... ஆமாங்க சத்தியமா ஒரே வாக்கியம்தான் இவ்ளோ நீளம்.

"இன்னொருவர் பெயரிலே பொய்யாக எழுதுகிறவர், முன்னையவர் பெயருக்குக் கெடுதல் விளைவிப்பதாக இருந்தால், அவரின் கருத்தின் தொனியிலே நிதானமின்மையும் ஆத்திரமேம்படுதலும் அதிக சந்தர்ப்பங்களிலே எண்ணிக்கையிலே அதிகமான பின்னூட்டங்கள் இல்லாமலும், அப்படி இருக்கும்பட்சத்திலே இருப்பின், அவற்றிலே சொன்னதையே சுட்டிக்கொண்டிருக்கும் கிளிப்பிள்ளைத்தனமோ அல்லது முன்னைப்பின்னைக்குத் தொடர்ச்சியின்மையோ இன்றி குறிப்பிட்ட பதிவுக்கான முழங்காலின் தட்டுப்படுதலுக்கு மூளை, முண்ணாண் துடிப்பான பின்னூட்டங்களாகவே இருக்கும்."

இவர் ஒரு சென்சேஷனா இருந்தார் கொஞ்ச காலத்துக்கு. மொதல்ல சிங்கப்பூர்ல இருந்து ஒரு குழந்தைக்குத்தாய்னாரு தன்னைப்பத்தி. அப்புறம் இவர் ஆண்தான்னு கண்டுபிடிச்சாங்க. அடுத்து, மூத்த வலைப்பதிவாளர் சந்திரவதனா அவர்கள். நாமெல்லாம் ஒரு பதிவ வெச்சுக்கிட்டு அதுல எழுதறதுக்கே கஷ்டப்படும்போது இவர் இருபதுக்குமேல பதிவுகள் வெச்சிருக்கார். அவரோட ப்ரொபைல பாத்தீங்கன்னா ஒரு பெரீய்ய்ய லிஸ்ட்டே இருக்கு. (இப்போ குமரன் அவங்களுக்கு போட்டியா வராப்போல தெரியுது).

2004ல் பா.ராகவன், எஸ்.ராமகிருஷ்ணன், மாலன் போன்ற சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிய வந்தாங்க. ஆனா, அவர்களுக்கு வலைப்பதிவுகளை பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் இருந்தது. பதிவுகளை வலை எழுத்தாளர்கள் அவங்க படைப்புகளை வெளியிடமட்டும் உபயோகிப்பாங்கன்ற கண்ணோட்டத்துல, என்னையும் உங்களையும் போன்ற சாதாரண மனிதர்கள் எழுதறது அவங்களுக்கு பிடிக்கல. பாரா வலைப்பதிவர்களுக்கு போட்ட பத்து கட்டளைகள் ரொம்ப நாளைக்கு பேசப்பட்டது. பாராவின் பதிவை இப்போ எடுத்துட்டாங்க போலிருக்கு. அதனால அவரோட கட்டளைகளை உங்களுக்கு காட்டமுடியல. ஆனா, எஸ்.ராமகிருஷ்ணனோட கருத்துகள் இங்கே இருக்கு. இப்போ இவங்க எல்லாம் வலைப்பதியரதில்லை போலிருக்கு. என்னைப்பொறுத்தவரை வலைப்பதிவுங்கறது எழுத்தாளர்களுக்கு மட்டுமில்ல. அவங்களுக்கு நிறைய வலை சஞ்சிகைகள் இருக்கு. யார் வேண்டுமானாலும் தன் கருத்துகளை டைரி மாதிரி பதிக்கறதுக்குதான் வலைப்பதிவு.

2005ல நடந்த எல்லாருக்கும் தெரிஞ்ச சில விஷயங்கள பத்தி பேச விரும்பாததால இத்தோட முடிச்சுக்கறேன். சரி, கடைசியா பாஸ்டன் பாலாஜியோட இந்த சுவாரசியமான பத்து கட்டளைகளை படிச்சுட்டுப்போங்க.

Venkataramani
Saturday, May 20, 2006
http://silandhivalai.blogspot.com/2006/05/2003.html