Donnerstag, Juni 24, 2004

பாலியல், சட்டமீறல்,தண்டனை

மயூரனின் பதிவிலிருந்து - 18.6.2004

நிதர்சினி வழக்கின் தீர்ப்புகள் வெளியான நிலையில், மனவோசை வலைக்குறிப்பில் இதுபற்றிய விவாதம் ஒன்று தொடர்ந்து செல்வதைப் பார்த்தேன்.

குற்றங்கள்-திருத்துதல்-தண்டனை பற்றிய என் நீண்டகால குழப்பங்களும் அதுபற்றிய என் இதுநாள்வரையான சிந்திப்புக்களும் மறுபடியொருமுறை என்னுள்ளே முனைப்புறுத்தப்படுவதற்கு இந்த விவாதம் வழிதந்திருக்கிறது.

மேற்கண்ட விவாதம் பாலியல் சட்டமீறல்களைப்பற்றியே தொடர்வதால் நானும் அந்தப் பரப்பினுள்ளேயே நின்றுகொள்ள முனைகிறேன்.

இன்றைக்கு தினக்குரல் பத்திரிகையை காலையில் வாசித்தபொழுது மனதுக்குள்ளேயே ஒரு கணக்கெடுப்பு செய்துகொண்டேன்.
பாலியல் சட்டமீறல்கள் பற்றி வெளியான செய்திகள் மொத்தம் நான்கு.
அதிலொன்று பத்துவயது பெண் மீதான வன்புணர்ச்சி பற்றியது.

இப்போதெல்லாம் இப்படியான செய்திகள் நாளேடுகளில் மிகச் சாதாரணம். இலங்கையிலிருந்து வருகிறசெய்திகளாக இருந்தால் அது கட்டாயம் அங்கீகரிக்கப்படாத பாலுறவு பற்றியதாகத்தான் (Incest,Child abuse) இருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.

வீட்டிலிருக்கும் பெரியவர்கள் இச்செய்திகளை பார்த்துவிட்டு "காலம் கெட்டுப்போச்சு" என்றோ அல்லது "கலி முத்திப்போச்சு" என்றோ பெருமூச்செறிந்துவிட்டு தமது அடுத்தவேலைகளை கவனிக்கப்போய்விடலாம்.
முன்பதின் பருவத்தினர் இச்செய்திகளை கிளர்ச்சியூட்டும் உரைப்பகுதியாக வாசித்துவிட்டுப்போகலாம்.

என்னைப் பொறுத்தவரையில் இவ்விரண்டு செயற்பாடுகளும் ஒரேமாதிரியானவைதான்.
கூடவே பாலியல் சட்டமீறல்களை தண்டனை மூலம் இல்லாதொழிக்கலாம் என்ற வரட்டு வாதங்களும், திருடனாய்ப்பார்த்து திருந்தச்சொல்லும் தோல்வி வாதங்களும் இவற்றோடு சேர்க்கப்படலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த நாளேடு ஒன்றில் வெளியான இத்தகைய செய்திகளை எண்ணிப்பார்த்தால், இருபது வருடங்களுக்கு முன்னால் வெளியான வற்றை எண்ணிப்பார்த்தல் உருப்படியானதாயில்லையென்றாலும் கூட ஒரு புள்ளிவிபரம் கிடைக்கும். (நான் இதுவரை எண்ணிப்பார்க்கவில்லை) சிலவேளைகளில் இப்புள்ளிவிபரம் - என் நம்பிக்கைக்கு எட்டியவரையில்-செய்தியாளர்களின் திறமை பற்றிய தகவல்களைத் தருமேயொழிய பாலியல் சட்டமீறல்களைப்பற்றி எந்த உண்மையான தகல்வல்களையும் தராது.

மனித இனம் பாலியலுக்கான சட்டங்களைக்கண்டுபிடித்த காலத்திலிருந்தே பாலியல் சட்டமீறல்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன.

சமூக ஒழுங்காக்கம் என்பது பெரும்பாலானவர்களுக்கு நன்மைபயக்கும் திட்டம் என்று சொல்லப்பட்டாலும், பலவேளைகளில் அது அதிகார வர்க்கமாக இருக்கும் சிறுபான்மையினரது நன்மைகளுக்காகவே நடைபெற்றுவிடுவதுண்டு. சமூக ஒழுங்காக்கம் விளிம்பு நிலையிலிருப்பவர்களை எப்போதும் தாக்கிவந்ததே வரலாறு. தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் தூக்கிவைத்து ஆடப்படும் சமூக ஒழுங்காக்கம் ஆண்நிலைப்பட்டது. அதனால் தான் அதன் அத்தனை நுணுக்கமான தளங்களிலும் பெண்கள் திட்டமிட்டே ஒடுக்கப்படுகின்றனர்.

"புலம் பெயருமளவுக்கு எம் வாழ்வில் அவலங்கள் நேர்ந்திருக்கும் காலத்தில் இப்படியொரு தகாத காரியத்தை எமது தமிழரே எப்படிச் செய்யத் துணிந்தார்களோ...?"
என்று ஒருவர் கருத்துத் தெரிவிக்கிறார். அவரைப்பார்க்க பாவமாக இருக்கிறது.
தமிழர்களுக்குத்தான் இப்படியான உரிமைமீறல்களை செய்வதற்கான மிகச்சிறந்த கலாச்சாரப்பின்புலம் இருக்கிறதே.
தமிழ் கலாச்சாரத்திலாகட்டும், தமிழர்களின் சமயங்களிலாகட்டும், அவர்களின் முதுபெரும் இலக்கியங்கள், மொழி எல்லாவற்றிலும் பெண் என்றால் வெறும் உடல்தானே?
பிள்ளைபெறும் இயந்திரம்தானே?
தம்மால் ஆளப்படக்கூடிய எதனையும் அவர்கள் பெண்ணாய்த்தானே பார்ப்பார்கள்?
தாய்மைகூட மென்மையாகத்தான் இருக்கவேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பார்கள்?

இவர்களால் மட்டும்தான் மற்றைய பெண்களின் உடலில் அவர்கள் அனுமதியின்றி தலையீடு செய்யமுடியும்/


மேற்கின் கலாசாரம் கூட எமது கலாசாரத்துக்கு இந்தவிஷயத்தில் சமமானதுதான்.
அது புறநிலையாகவே, பெண்களை ஒடுக்குகிறது நாம் அகநிலையாக மிகத்திட்டமிட்டு நுணுக்கமாக ஒடுக்குகிறோம்.

பெண்ணின் உடல்மீதான அதிகாரம். அதுதான் எமது கலாசாரத்தின் சாராம்சம். இதனை மறுத்துரைக்க முனைபவர்களது இறுகிப்போன சிந்தனைகளை கனகாலத்துக்கு பெண்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இந்தப்பின்புலத்திலே பாலியல் சட்டமீறல்களை பார்ப்பது நல்லது.

என்னைப்பொறுத்வரையில் ஒருவரின் அனுமதியின்றி அவரின் எந்த விடயத்திலும் தலையிடுவது குற்றம். இதனை அடிப்படையாகக்கொண்டே நான் பாலியல் குற்றங்கள் எவை என வரையறுத்துக்கொள்வேன்.
ஏமாற்றுவது எந்த வகைக்குள் வரும்?
ஏமாளிகளை உருவாக்குகின்ற கல்விமுறையின், சமூக முறையின் குற்றம் அது.

ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ள, ஒன்ன்றையொன்று தீர்மானிக்கிற ஏராளமான விஷயங்கள் இதில் சம்பந்தப்படுகிறது

பெண்களுடைய உடையெல்லாம் பளபளப்பாகவும், கண்ணைப்பறிப்பதாகவுமே இருக்கவேண்டும்.
இது எழுதப்படாதவிதியாகிவிட்டது. பெண்களை அழகுக்கு அடிமையாக்கி, பொம்மைகளாக்கும் ஆணாதிக்கத்தின் சுயனலம்.

பெண்கள் நலிவானவர்கள் என்று சமூகத்தின் அடியாழம்வரை வேரோடிப்போயிருக்கும் கருத்து.

இவற்றையெல்லாம் சமூகத்தில் விதைப்பவர்கள் யார்?
அவர்களைப் பிடித்து தூக்கில் போடுங்கள்.

பட்டினத்தாரை, திருவள்ளுவரை, ஒளவையாரை, கண்ணதாசனை, வைரமுத்துவை, கம்பவாரிதியை, வசந்தா வைத்தியநாதனை தூக்கில் போடுங்கள்.

எல்லோரும், எல்லாமுமாக சேர்ந்து ஒருவனை மனக்குழப்[பத்துக்குள்ளாக்கி குற்றம் செய்யத் தூண்டிவிட்டு அவனை மட்டும் தூக்கில் போடுவது எந்தவிதத்தில் நியாயம்?

விடுதலைப்புலிகளால் செய்யப்பட்ட, அல்லது அவர்களால் உரிமைகோரப்படாத கொலைகளை (வடக்கில் நிகழ்ந்தவை) ஒருவர் உதாரணம் காட்டினார்.

கம்பத்தில் கட்டிவைத்து, ஊர்பார்க்க குற்றங்களை எழுதிவைத்து பயங்கரமாக செய்யப்படும் கொடூரமான கொலைகள், சமூகத்தில் அதிர்வினையும் பயத்தினையும் ஏற்படுத்துவது சகஜமே.
கம்பக்கொலைகளாகட்டும், இன்றைய பிஸ்டல் கொலைகளாகட்டும், சரிபிழைகளுக்கு அப்பால் சமூக மனநிலையில் வெண்டாத தாக்கங்களை விளைவிப்பது ஒருபுறமாக இருக்க, அதைக்கொண்டுபோய், மூடிய நிலையில், பொதுமக்கள் பார்க்க முடியாவண்ணம், மக்களே, வழக்கினை மறந்துபோன நிலையில் செய்யப்படும் மரணதண்டனைகளோடு ஒப்பிடுவது என்றுமே சரியாகாது.

இங்கே நான் தந்திருபதெல்லாம் மிக மேலோட்டமான குறிப்புகள் மட்டுமே,.

ஆண் மனம் பற்றிய சரியான புரிதலோடு செய்யப்படும் பெண்ணிலை ஆய்வுகளின் மூலம் இதுபற்றியெல்லாம் விரிவான விளக்கங்களை உலகம் பெற்றுக்கொள்ளமுடியும்.


உடனடித் தீர்வுபற்றி பலரும் கவலைப்படுகிறார்கள்.

என்னகேட்டால், ஒன்று சொல்வேன்.

"விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு, ஆணாதிக்கத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தினை உடனடியாக ஆரம்பிப்பதே எல்லாவற்றுக்குமான தீர்வுக்கு உலகளாவிய அளவில் முதற்படியாக இருக்கும்."

posted by மு.மயூரன் at 9:41 PM