Montag, März 29, 2004

பிரபு ராஜதுரை-March 28, 2004

விதி தன்னை படைக்கட்டும்!

வணக்கம்,

தொண்ணூறுகளின் இறுதியிலும் பின்னரும் இந்தியாவில் மென்பொருள் தொழில் அசுர வளர்ச்சியடைந்ததற்கு காரணம், 'மென்பொருள் தொழில் வளர்ச்சிக்கென நம் அரசிடம் ஒரு அமைச்சகம் இல்லை' என்று பிரமோத் மஹாஜன் வேடிக்கையாக குறிப்பிடுவார். எனினும் அதில் ஒரு உண்மை இருக்கிறது. அது போலவே வலைப்பதிவென்பது இதுதான், என்று கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு பலரும் இத்தனை ஆர்வத்துடன் பங்கெடுத்து...வலைப்பூக்கள் இத்தனை வளர்ச்சியடைந்திருக்குமா என்பது கேள்விக்குறி!

முதலில் முட்டை முழுதாக உடைந்து கோழிக்குஞ்சு வெளிவரட்டும். பின்னர் அதன் தன்மை அறிந்து பெயர் வைக்கலாம். அது போலவே, பலரும் பல கோணங்களில் இவற்றை பயன்படுத்தட்டும். வெல்பவை விதியாக தன்னாலாயே மாறும். பலரின் பாராட்டினையும் பெற்ற பத்ரியின் 'எண்ணங்கள்' அவ்விதமான சில விதிகளை படைக்கும் என்பது என் அனுமானம். அவை எளிமை மற்றும் நிலைத்தன்மை. தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில், பத்ரி நல்ல ஒரு திட்டமிடலுடனும், தெளிவான ஒரு நோக்கத்துடனும் தனது வலைப்பதிவினை முன்னெடுத்துச் செல்வதாக என்னால் கூற முடியும். மேலும், பத்ரி 'தனது வலைப்பதிவானது வழக்கமாக இணையத்தில் வலம் வரும் நடுத்தர, மேல் நடுத்தர இளைஞர் பட்டாளத்தைக் கடந்து விரைவில் ஏற்படவிருக்கும் இணையத் தொடர்புப் புரட்சியின் துணை கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் சாதாரண மக்களைச் சென்றடைந்து....இதன் மூலம் ஒரு சமூக, அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு பொதுக்கருத்தினை உருவாக்கும் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவராக தெரிகிறார். அதற்குத் தேவை நல்ல தமிழ். தோற்றத்தில் எளிமை. நிலைத்த தன்மை. நிலைத்த தன்மை என்பது தொடர்ந்து அங்கு பதியப்படும் பதிவுகள் அனைத்துமே
பெரும்பாலும்...நான் கூறிய அந்த நோக்கத்தினை நோக்கிய செயல்பாடுகளாகவே இருப்பது.

இவ்வகையான நிலைத்த தன்மைக்காக பலர் மெனக்கெடுவது புரிகிறது. இதன் காரணமாகவே, ஒருவரே பல வலைப்பதிவுகளை வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு வலைப்பதிவினையே இதோ என்னைக் கவர்ந்த பெண்களைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நம்மையெல்லாம் கிடப்பில் போட்டுச் சென்ற நம்ம பாலாஜி பாரிபோன்றவர்கள் இருக்கையில், மூன்று நான்கு
வலைப்பதிவுகளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? (பாரியின் உறுமி மேளம் மறுபடி உறுமத்
தொடங்கி விட்டது. தனது மதிப்பிற்குறிய கோமதி டீச்சரைப் பற்றி ஆரம்பித்தவர், ஆரம்பித்த
வேகத்திலேயே தொடரும் போட்டிருக்கிறார்)

இவ்விதமான மல்ட்டி டைமன்ஷனல் வலைப்பதிவுகளில் ஏழு பதிவுகளுடன் முதலிடத்தில் இருப்பவர்
சந்திரவதனா. 'படித்தவை' என்று ஒரு பதிவிருப்பதால் அவரது பதிவுகளில் எதைப் பற்றி எழுதுவது என்பதில் சிரமமிருக்கவில்லை. முள்ளுக்கம்பிகளுக்கு பின்னே மகனை அணைத்தபடி இருக்கும் ஈராக் போர்க்கைதியின் படம் உள்ளத்தை உருக்குகிறது. ஆனாலும் பெரும்பாலோனார் ஏற்கனவே இப்படத்தை பார்த்திருக்கலாம். பெண்ணென்று பூமிதனில் என்று ஒரு சுட்டி! சொடுக்கினால் மு.பொன்னம்பலன் என்பவரின் வலைப்பதிவில் பதிந்துள்ள அமிர்தானந்தமாயி அம்மாவின் உரை! புதிதாக அந்த உரையில் ஏதும் கூறியிருப்பதாக தெரியவில்லை. அடுத்து முஸ்லீம் சமூகத்தினை சேர்ந்த ஜுனைதா பேகம் என்ற எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை.... ஆச்சரியமான தகவல்கள். முக்கியமானது பெரும் புகழ் பெற்ற எழுத்தாளரான இவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரைதானாம்.

பின்னர் சில புகைப்படங்கள் இருக்கின்றன. புகைப்படக்காரர் சந்திரவதனா இல்லை என்பது புரிகிறது. ஆனாலும், ஏன் இப்படங்கள் இவரை பாதித்தது, அல்லது ஏன் இவர் இவற்றை ரசித்தார் என்று மனதை சற்று திறந்து வைத்திருந்தாரானால்.....வலைப்பதிவு மேலும் அர்த்தமுள்ளதாயிருந்திருக்கும்.

"ஆர்கைவ்" கிடங்கின் இடையே தோண்டினால் திறந்த பக்கத்தில் சிறுமியின் சிறுநீரக அறுவைச்
சிகிச்சைக்காக பண உதவி வேண்டும் புகைப்படத்துடன் அறிவிப்பு. சிறுமிக்கு வேண்டிய உதவி இதற்குள் கிடைத்திருக்கட்டும். நடுத்தர் குடும்பத்தை சேர்ந்த பலர் இன்னமும் இறந்தகாலத்திலேயே இருக்கிறார்கள். ஒரு சாதாரண இரத்த சோதனைக்கே ஆயிரம் ரூபாய் வரை மும்பையில் கேட்கிறார்கள். எந்த ஒரு அறுவை சிகிச்சையானாலும் சாதாரணமாக ஐம்பதாயிரம் ஆகிறது. இனி மருத்துவ காப்பீடு செய்து கொள்வது இங்கும் வளர்ந்த நாடுகளைப் போல அவசியம் என்பதை நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்களே உணர மறுக்கிறார்கள். வருடம் சுமார் ஐயாயிரம் ரூபாய் போனால் போகிறது....மருத்துவ செலவு என்று வந்தால் யாரிடமும் சென்று நிற்க வேண்டாம் என்ற மன நிம்மதிக்காக இந்த விலையை கொடுப்பதில் தவறில்லை.

நான் சிறுவனாக இருக்கையில் தனியார் மருத்துவ மனைகளில் 'இது சிக்கலான கேஸ். நீங்க
பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்க' என்று கூறுவார்கள். பெரிய ஆஸ்பத்திரி என்பது அரசு மருத்துவமனைகள். நான் வீட்டிலும் எனது தங்கை அரசு மருத்துவமனையிலும் பிறந்தோம். இப்போது அரசு மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துக் கொண்டு செல்வதை நினைத்துப் பார்க்க இயலுமா? நமது பொருளாதார நிலை உயர்ந்து விட்டது என்பதை விட அரசு மருத்துவமனைகளின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது என்பதுதான் காரணம். 7000 கோடி ரூபாய்க்கு ஒரு பொம்மைக் கப்பலை வாங்க ஏழை மக்கள் கொடுக்கும்
விலை, மருத்துவ வசதியின்மை!!!

வருமான வரி கட்டுபவர்களுக்கு சிறையில் முதல் வகுப்பு கொடுக்கிறார்கள். ஆனால், இவ்வாறான மருத்துவ உதவி தேவைப்படும் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு அறையாவது கொடுக்கலாம் அல்லவா? வருமான வரி கட்டவும் பலர் முன் வரலாம். ஹ¥ம்....

அன்புடன்

பிரபு ராஜதுரை