Donnerstag, April 01, 2004

நிலா முற்றம் - Thivakaran

Wednesday, March 31, 2004
நினைவு நதியில் மனதின் ஜதி - சந்திரவதனா

"எம் வாழ்வில் நடந்து முடிந்து போன சில விடயங்களோ அல்லது நாம் சந்தித்த சில விடயங்களோ அடிக்கடி எமது நினைவுகளுக்குள் வலம் வந்து கொண்டே இருக்கும். அவை சந்தோசமான விடயங்களாக எம்மைக் குதூகலிக்க வைப்பதாகவோ அல்லது மிகத் துயரமான விடயங்களாக எம்மைப் மிகவும் பாதிப்பதாகவோ இருக்கலாம்.
இழப்புகள் எல்லோருக்கும் வருவதுதான். இதில் மனித இழப்புக்கள் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நான் மிகவும் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்." என்ற முன்னுரையுடன் தொடங்கும் திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் நினைவு நதியில் மனதின் ஜதி என்ற அவரின் கடந்தகால நினைவுகளை அவரின் மனவோசை வலைப்பூவில் படிக்க நேர்ந்தது.

பொதுவாக புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் ஈழத்து தமிழ் எழுத்தாளர்களில் சந்திரவதனா அவர்களின் படைப்புக்கள் என்னை ரொம்பவும் கவர்ந்தவை. நினைவு நதியில் மனதின் ஜதி என்ற அவரின் பால்யகால நினைவுகளை படிக்கும் போது அப்படியே நம்மையும் அறியாமல் நாமும் அந்த காலகட்டத்துக்குள் சென்றுவிடுகின்றோம்.

பொதுவாகவே எல்லோரது மனங்களிலும் அவர்களின் கடந்தகால நினைவுகள் என்றும் பசுமையாக மனதில் ஒடிக் கொண்டிருக்கும். அதே போல சந்திரவதனா அவர்கள் 3 வயதில் சந்தித்த முதல் மரணம் பற்றியும் சின்ன வயதில் விளையாடிய "இவடம் எவடம்" விளையாட்டு பற்றியும் அப்படியே பசுமை குறையாமல் தந்திருக்கின்றார். அவரின் படைப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்.

# posted by thiva @ 3/31/2004 05:18:26 PM