Montag, Oktober 23, 2006

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?

பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)

http://poongaa.com/content/view/382/10047/

ஓர் இதழ் மிகுந்த விற்பனையுள்ளதா, குறைந்த விற்பனை உள்ளதா, அப்படியாயின் அது பேரிதழா சிற்றிதழா என்ற வினா மறைந்துபோய், இணைய இதழா அச்சிதழா இன்றைய வளர்ச்சியில் எது நீடிக்கும் என்ற வினா உலகம் முழுதும் எழுந்துள்ளது.

இணைய இதழ், அச்சிதழ் - இவற்றுள் எது சிறந்தது? என்ற வினாவைத் திண்ணை இணைய இதழில் (ஆகஸ்ட் 10, 2006;வியாழன்) எழுப்பியுள்ளார் ஜெர்மனியில் வாழும் சந்திரவதனா செல்வகுமாரன்.

இணைய இதழ்களின் வரவால் இன்றைய இன்றைய ஜெர்மனிய இதழ்கள் ஆட்டம் கண்டுள்ளன, என்கிறார் அவர். இந்த நிலையில் நமது இதழ்கள் நாளேடுகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று ஆர்வமுறுகிறார். ஈழத் தமிழர்கள், பன்னாட்டுத் தொடர்பும் இடையூடாட்டங்களும்[interactions] கொண்டவர்கள் என்பதால் அவர் எழுப்பியுள்ள வினா, அவர்களைப் பொறுத்தவரை பொருள் மிகுந்ததுதான். கரணியம், அவர் விதந்தோதியுள்ள 'பூவரசு' என்ற இதழ், தன் பதினேழாவது ஆண்டில் தொடர்ந்து அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாகி விடுவதா என்ற இக்கட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.

புலத்தில் படைப்பாளரும் இதழ் வெளியீட்டாளரும் மிகுந்த பண நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். உள்ளூரில் வெளியாகும் பேரிதழ்கள்தாம் படைப்புகளுக்குப் பணம் தர முடியும். வேறுவகையில் சொன்னால் புலத்தில் வெளியாகும் பரவலான வாசிப்புடைய இதழின் வெளியீட்டாளருக்கு உள்ள பொருளியல் நிலையும் உள்ளூரில் நடத்தப்பெறும் சிற்றிதழ் வெளியீட்டாளருக்குள்ள பொருளியல் நிலையும் ஒன்றேதான். இணைய இதழ் நடத்துவோர் ஆண்டுக்குச் செலவிடும் தொகை, பரவலான சிற்றிதழொன்றுக்கு மாதமொன்றுக்குத்தான் சரிவரும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது ஒரு காசும் செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்திருப்பதுதான். பணத் தட்டுப்பாட்டுடன் இணைய இதழை நடத்தி மாய்வதைவிட, வருமானத்துக்குரிய பணியொன்றைச் செய்துகொண்டே மனநிறைவுடன் தொடர்ந்து தன்னிதழை, மேலதிகமான வாசகர்ப் பரப்புடன் நடத்தக்கூடிய வாய்ப்பு வருகிறதெனில் விடுவாரா, அவ்வாறு இக்கட்டில் உள்ள ஓர் இதழாசிரியர்? 'பூவரசு' இதழாசிரியரைக் குறித்து நான் இவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில், அவர் அதை வாசகரிடம் விட்டிருக்கிறார். அவர்கள் எவ்வாறேனும் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தவே வேண்டும் என்று கருத்துரைத்திருக்கின்றனர்.

பழகிவிட்ட கண்களுக்கு, அச்சுப்பதிப்பாக வரும் இதழ் தரும் மனநிறைவு இணைய இதழால் வராது. இது உண்மையே என்றாலும், தொடர்புடையதே. பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ள வளரிளம் பருவத்தினர் இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர். நான் வழக்கமாக இணையமுலவும் நடுவத்தில், அதை நடத்துபவர் ஒழுங்குக்கு முதன்மை கொடுப்பவரென்பதால், ஆக்கவழியில் இணையமுலவும் வளரிளம்பருவத்தினர் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுள் பல்கலை மாணவர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் விற்பனையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வார இதழ் ஒன்றை, நாள்தோறும் பகுதி பகுதியாக அவர் படிக்கிறார் என்றும் ஏணைய இணையம் உலவும் பொழுதைத் தன் ஆய்வுப் பணித்திட்டம் உருவாக்கச் செலவிடுகிறார் என்றும் அறிந்து கொண்டேன்.

அந்த வார இதழ் விலை பத்துரூபாவுக்கும் குறைவுதானே, ஒரு முறை வாங்கிக் கொண்டால் போதுமே, கையிலோ பையிலோ வைத்துக் கொண்டு இதேபோல் வாரம் முழுதும் வாசிக்கலாமே என்று கேட்டேன். அவர் சொன்ன மறுமொழி என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது. "ஒரு மணிநேரத்துக்கு இங்கு இணையம் உலவப் பதினைந்து ரூபா. இதே சாலையில் மேல்நிலைப் பள்ளியருகில் பன்னிரண்டு ரூபாதான். சூழ்நிலை, அப்பா வழங்கும் கைப்பணம் ஆகியவற்றைப் பொறுத்து அங்கும் இங்கும் இணையமுலவுவேன். பணித்திட்டத்தைத் தரவுகளிலிருந்து தட்டெழுதும்பொழுது சலிப்பு வரும். அப்பொழுது, வந்தவுடன் முகவரியிட்டு வரவழைத்து சுருக்கி(minimise)வைக்கும் அவ்விதழை விரிவாக்கி வாசித்துவிட்டு மீண்டும் பணித்திட்டத்தில் இறங்குவேன். இதனால் எனக்கு வேலையும் நடக்கிறது. நான் விரும்பும் இதழை இலவசமாகவே வாசிக்கவும் முடிகிறது. அதை வாங்கி, அடுத்தவர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, திரும்பப் பெற துன்பப்படவும் வேண்டியதில்லை. தூசியுமில்லை. பழையதாள் கடைக்குச் சுமந்து சென்று தொல்லைப்பட வேண்டியதுமில்லை" என்றார் அவர். என் அடுத்த வினாவையும் கேட்டேன். "நீங்கள் வாசிக்கும் இதழ் முழுவதையும் இலவசமாகத் தருவதில்லையே! கதை, கட்டுரைகளின் முதற்பகுதியைத்தானே தருகிறார்கள்..'மேலும் வாசிக்க' என்று கேட்டால், நம் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார்கள். தொகை அனுப்பச் சொல்கிறார்களே..." என்றேன். அவர் மர்மமான புன்னகையொன்றை உதிர்த்தார். "குறிப்பிட்ட சாவி மட்டும்தான் பூட்டைத் திறக்குமா?" - என்று விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தின் பாணியில் வினாவொன்றை உதிர்த்துவிட்டு, தன் ‘டூவீல’ரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார்.

"இணையங்களின் வரவுக்குப் பின், குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் [அச்சுப்] பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்துவிட்டதுதான் அப்பட்டமான உண்மை" என்று சொல்லும் சந்திரவதனா, "எப்போதுமே [அச்சுப்] பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லை.." என்ற தெளிவான கருத்துடையவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதனால்தான், நானும், எனக்கென்று மூன்று இணைய வலைப்பதிவுகள் உள்ளபொழுதும் அவற்றை விடாது இடுகைகளிட்டு நிகழ்த்துவதுடன், தொடர்ந்து அச்சிதழ்களுடன் ஊடாடியும் படைப்புகள் தந்தும் வருகிறேன்.

இளந்தலைமுறையினரில் விதிவிலக்கானவர்களைத் தவிர எல்லோரும் வகைவகையான ‘மொபைல்’களுக்குச் செலவிடுகிறார்கள்; ‘ஸ்ப்ரே’க்களுக்குச் செலவிடுகிறார்கள்; திரைப்படங்களுக்குச் செலவிடுகிறார்கள்.[திரைப்படம் ஒன்றுக்குச் சீட்டு, நொறுக்குத் தீனி, ‘சாஃப்ட் டிரிங்ஸ்’ ஆகியவற்றுக்கு ஆகக்குறைவாக ஐம்பது ரூபாவாவது தனக்குச் செலவாவதாக தொ.கா.'வில் ஓரிளைஞர் குறிப்பிட்டார். தான் நண்பர்களுக்குச் செலவிடுவதோ, கெட்ட பழக்கங்களுக்குச் செலவிடுவதோ இல்லை என்றார். தனக்குப் பிடித்த படத்தை இவ்வாறு குறைந்தது ஏழு,எட்டு முறையாவது பார்த்துவிடுவாராம். "ஒரு வாரத்துக்கு எத்தனைப் படம் பார்ப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "எப்படியும் ஏழுக்குக் குறையாது!" என்றார். வாரத்துக்கு ஏழு நாட்கள்தாமே!...] ஆனால் புத்தகத்தையோ, இதழையோ காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை. தரமான இதழ் என்றால் சொல்ல வேண்டுவதே இல்லை. பணிக்குச் செல்லும் பெண்டிரும், இல்லத்தரசியருள் பலரும் வாடகை நூலகங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். எட்டு ரூபா இதழை இரண்டு ரூபா வாடகைக்குத் தரும் அத்தகைய நூலகங்களுக்குப் போட்டியாக, ஒரு ரூபாவுக்கே தரும் ‘மொபைல்’ வாடகை நூலகங்களும் உள்ளன. ‘டி.வி.எஸ். டூவீலர்’ அதற்கு வசதியாக உள்ளதாம். இணையம் உலவுவோரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இதழ்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் மனம் இல்லாதவர்கள் என்பதே உண்மை. எதிர்வரும் 2010ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள - ஐம்பது அகவைக்கு மேற்பட்டவர்களே இதழ்களை வாசிப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி.

இதழ்கள் சிலவற்றுக்குப் படைப்புகளை அனுப்புவோர், தம் படைப்பு அதில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, அவற்றை விலை கொடுத்து வாங்கிப் பார்த்தே அறிந்தாக வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். அதே பொழுது, மூன்று உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், சேர்த்து விடுபவருக்கு இலவசமாக இதழைத் தொடர்ந்து அனுப்பும் இதழ்களும் உள்ளன. படைப்பாளருக்கும் புரவலருக்கும் தனித்தனியே இதழ்களைப் பொறுப்பாக அனுப்பித் தரும் இதழ்கள் உள்ளன. இணைய இதழ் எனில் இந்தச் சிக்கல் எதுவுமில்லை.

காலாண்டிதழ் ஒன்று. அதன் ஐந்தாவது இதழை வாசித்து முடித்துவிட்ட பின்பு, அதன் முன்னிதழ்கள் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ள[ஓதமில்லாமல் வறண்ட]இடத்துக்குச் சென்று பார்த்தேன். முதலாம் இதழும் இரண்டாம் இதழும் பழுப்பாகி அச்செழுத்துகள் மங்கித் தெரிந்தன. இணைய இதழ் அவ்வாறில்லை. மின்னூலும் அப்படியே. இப்பொழுது கூகிள் தேடுதளத்தில் 'மரபுத் தொடர்கள்' என்று தட்டெழுதித் தேடினால் இலவசமாகக் கிடைக்கும் சோலைக்கிளி அவர்களின் 'காகம் கலைத்த கனவு' என்ற முழு மின்னூல், மதுரை மின் நகலகத் திட்டத்தாரால் உருவாக்கப் பெற்றுள்ளது. அதன் தலைவர், சுவிட்சர்லாந்தில் வாழும் டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஜெர்மனியில் வாழும் திரு கண்ணன் அவர்கள், அத்திட்டத்தின் செயலாக்க ஆசிரியர். வடிவான நூல். என் மேசையின் சிறிய இழுவியுள் அது போன்ற இருநூறு நூல்களை வைத்துக் கொள்ள முடியும். இணைய இதழ்கள் பலவற்றை, "எதைக் கொண்டு போனோம்! அதைக் கொண்டு வருவதற்கு!" என்ற எதிர்மறை முறையில், உலவுபுலங்களில் வாசித்துவிட்டு வந்து விடுகிறேன்.
'புதுச்சேரி' மின்னிதழை வாசிக்கும்பொழுதே கூடல், வார்ப்பு, திசைகள், தமிழோவியம், மரத்தடி, முத்தமிழ் மன்றம், திருக்குறள், எழில்நிலா, தமிழம், அன்புடன் புகாரி, அம்பலம், ஆறாம் திணை, கதம்பம், தமிழமுதம், தமிழ்மண், பதிவுகள், நிலாச்சாரல், நம் நாடி, சிஃபி, இ-சங்கமம், தமிழன் எக்ஸ்பிரஸ், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், திண்ணை, கீற்று ஆகிய இணைய இதழ்களையும் சுட்டிசொடுக்கி வாசித்துவிட முடிகிறது. இவற்றுள் கூடல், முத்தமிழ் மன்றம், திருக்குறள், தமிழம், தமிழமுதம், நிலாச்சாரல், சிஃபி தமிழ் ஆகியவை இணைய தளங்களும் கூட. குமுதம்(=குமுதம் குழும இதழ்களான தீராநதி முதலியவை), விகடன்(+ விகடன் குழும இதழ்களாகிய சுட்டி விகடன் முதலியவை), தமிழன் எக்ஸ்பிரஸ், மங்கையர் மலர், கல்கி ஆகியவை அச்சிதழ்களாகவும் இணைய இதழ்களாகவும் ஒரே நேரம் வெளிவருபவை. ஏன் இவை அச்சிதழ்களாக மட்டும் வெளிவரவில்லை? இவ்வாறு இணைய இதழ்களாகவும் வந்தால்தான் மேலும் பரவலான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும் என்பதே விடை. இன்னும் மின்னிதழ்களாக வரும் நாளேடுகளும் உள்ளன அல்லவா? தினகரன், தினத்தந்தி, தினமலர் முதலானவையும் அவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை.

ஆகவே, மேற்குறிப்பிட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று, நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்க வேண்டும் என்றால், மின்வெளியில்(Cyber Space)நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும் என்பது தெளிவாகிறது.

http://kalapathy.blogspot.com/2006/10/blog-post_116106401618516138.html

Quelle - Poonga-6-23.10.2006

தொகுப்பாளரின் மேசையிலிருந்து

ஆசிரியர் குழு


Poonga ithazh - 6
23.10.2006
http://poongaa.com/component/option,com_magazine/Itemid,1/

பண்டிகைகள் வருவதும் பழங்காலத்திலே வால்வெள்ளி வருவதும் ஒன்றேதான். வரப்போவதையிட்டு எதிர்பார்ப்புகளோடு திட்டங்கள் தீட்டுவதும் வந்தபொழுதில் அதை உணரப் பொழுதின்றி சடங்குகளுக்குள் முயங்குவதும் சென்றபின்னால், கழிந்ததையிட்டுப் பேசுவதிலும் ஆகிவிடுகின்றது. பண்டிகை ஒன்றின் நோக்கு, ஒருவர் நாளும் தான் வாழமுடியாத எதிர்பார்ப்புகளுக்கு நாளொன்றேனுங் குறித்து தீனி போட்டு மகிழ்ந்திட முயற்சிப்பதுதான். ஆனால், சடங்குகள் - மதம் சார்ந்த பழையனவோ, களியாட்டம் சார்ந்த புதியனவோ - பண்டிகைகளின்போது, ஒருவரின் பொழுதினை அவருக்கென்று தனிப்பட்ட விட்டுக்கொடுக்க முடியாத அளவுக்கு அமுக்கிவிடுகின்றன. மதச்சடங்குகளின் வளையத்திலிருந்து ஓரளவுக்கு வெளியேறிய மக்கள், தொலைக்காட்சி, திரைப்படங்களின் வளையத்துக்குள்ளே நுழைந்து நெரிந்துகொள்ளும் அவலத்தினை அண்மைக்காலத்திலே கண்டுவருகிறோம். இன்னொரு புறம், அரசியற்சூழலின் அவலமும் அகதிச்சிதறலும் பலருக்கு இனிதான பழைய பண்டிகைத்தினங்களைப் புதிய பண்டிகைப்பொழுதினைத் துயர்பொழுதாக்கும் கூரிய ஆயுதங்களாகவும் மாற்றிவிடுகின்றன. இவ்வாரப்பூங்காவின் கட்டுரைகளும் சந்திரவதனாவின் கவிதையும் இவ்விடயங்களைச் சுற்றி எழும்பியிருக்கின்றன.

வீரவன்னியனின் 'சிவகாசிப்பிஞ்சுகள்' கட்டுரை பண்டிகைகளின் மிகவும் அறியப்பட்ட, கெடுதலான மறைமுக விளைவொன்றைப் பேசுகின்றது. பண்டிகைகளினை முன்னிட்டுக் கரியாக்கப்படும் மத்தாப்புக்களினதும் தீக்குச்சுகளினதும் உரசல்களிலே எரிந்துபோகும் பிஞ்சுகளின் அவலத்தினைப் பேசுகின்றது. இது குறித்தும் உடலளவிலும் உளமளவிலும் எரிந்துபோகும் இக்குழந்தைகள் குறித்து, அவ்வப்போது பேசப்பட்டாலுங்கூட, குறிப்பாக, இந்தியாவிலே குழந்தைகள் தொழில்புரிதல் தடைசெய்யப்பட்டிருக்கும் இம்மாதத்திலே இக்கட்டுரையின் அவசியம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. சிவகாசியின் தொழில்வளம் குறித்தும் பட்டாசுத்தொழிற்சாலைகள் தரும் பொருளாதாரம் பற்றியும் அள்ளித்தரும் தளமெதுவுமே இக்குழந்தைகள் பற்றிப் பேசாமலிருப்பது மிகவும் கவலைக்குரியதும் கவனிக்கப்படவேண்டியதுமாகும். சிவகாசிப்பிஞ்சுகள் கட்டுரை, தன்னளவிலே இளமையிலேயே கருகிப்போம் இம்மத்தாப்புகளின் இருப்பினை - இறப்பினை- மட்டுமே பேசினாலுங்கூட, இதற்காக இணையத்தமிழர்கள் என்ன செய்யமுடியுமென எண்ணுவதற்கான ஆரம்பப்பொறிப்புள்ளியாகவே நாம் இக்கட்டுரையை எடுத்துக்கொள்ளலாம். இதனோடு பூங்காவின் கவனத்தினை ஈர்த்த சபாபதி சரவணனின் ஆதங்கக்கட்டுரை அலட்சியத்தின் விளைவான குழந்தைகளின் அநாவசிய இறப்புகள் குறித்தது.




இக்குழந்தைத்துயரங்களுக்கு மாறாக, குழந்தைகளின் மகிழ்ச்சியினை அவர்களே மையப்படுத்தித் தெறிக்க, அஞ்சலி, மழலை ஆகியோரின் வண்ணமயமான உலகங்கள் உங்கள் முன்னே பூங்காவிலே சுழல்கிறன.


நடைமுறைக்கும் காலவோட்டத்துக்கும் தன்னை நல்லபடி இணைத்துக் கூர்த்துக்கொள்ளாத மொழி, சுவடிகளிலேமட்டும் உறைந்திருக்கும் மொழியாகச் செத்துவிடும். இக்கண்ணோட்டத்திலே, அண்மைக்காலங்களிலே தொழில்நுட்ப, அறிவியல், மருத்துவச்செய்திகளும் கட்டுரைகளும் விரிந்தும் ஆழங்கொண்டும் புதிதாகவும் பெயர்க்கப்பட்டும் தொழில்முறைசார்ந்தோரால் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கப் புறப்படுவது இணையத்தின் தனிச்சிறப்புக்குரியதெனலாம். மயூரன், கோபி, வஜ்ரா, வைசா ஆகியோரின் குறிப்புகள் இவற்றுள்ளே அடங்குகிறன. தன்னிலே வெளியாகும் படைப்புகளிலே இவ்வகையான கூறுகளுக்கு ஊக்கத்தினை அளிக்கப் பூங்கா ஆர்வம் கொள்கிறது. இந்த வாரத்துப்பூங்காவிலும் தமிழ்மணத்திலே திரட்டப்பட்ட படைப்புகளோடு, பூங்காவுக்கென்றே தனியாக பத்மா அர்விந்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் "பதின்மவயதினரின் போதைப்பொருள் அடிமைத்தனமும் சில தீர்வுகளும்" இணைந்துகொள்கிறது. பூங்கா வெளிவரத் தொடங்கியபோது குறிப்பிட்டபடி, இனி வரும் பூங்கா இதழ்கள், இதுபோன்ற தனிப்பட்ட சிறப்புக்கட்டுரைகளும் செவ்விகளும் பல்வேறு துறைகளிலும் உள்ளடங்கி வெளிவரும். இது பூங்கா வலைஞ்சிகையைத் தமிழ்மணம் திரட்டி சார்ந்த ஒரு தொகுப்பு இதழ் என்பதற்கும் அப்பால், ஒரு முழுமையான இதழாகப் பரிணமிக்கச்செய்யும்.


தமிழ் அரசியல் குறித்து சபேசன், திராவிடத்தமிழர்கள், குழலி, அருண்மொழி ஆகியோரின் கட்டுரைகள் பேசுகின்றன. தமிழின் நலன் குறித்த அரசியலைச் செய்கின்றோமென்று சொல்கின்ற அரசியல்வாதிகளின்மீது தமிழின் நலத்தின் பெயரினிலே கேள்விகளையும் மறுப்புகளையும் சபேசனும் அருண்மொழியும் முன்வைக்கின்றனர். இவர்களது கட்டுரைகள், தொடர்விவாதங்களுக்குரியன. மரணதண்டனை குறித்த ஆழமான, தமைத்தாங்கும் ஆதாரங்களுடனான பண்புநிறை பேச்சுமொழியிலமைந்த தொடர்விவாதக்கட்டுரைகளை எதிர்பார்ப்பதுபோலவே, இக்கட்டுரைகள்மேலும் பூங்கா வரும் வாரங்களிலே பதிவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

உமா கதிரினது தெருக்கூத்துமீதான ஞாபகம், பழைய பயில்கலைகளைத் தானும் மீட்டுப்பார்த்து வாசகர்களுக்கும் ஞாபகத்துக்குக் கொணரும் ஒரு நல்ல தொடக்கம். தமிழ்நிலத்திலே முளையிட்டுத் தொடங்கியும் நாற்றாகப் புகுந்தும் அழிந்து போகும் பழங்கலைகளைப் பேணலும் பதிவு செய்தலும் அண்மைக்காலத்திலே பதிப்பேடுகளிலே வரவேற்புப் பெறுகின்றன. இதுபோன்று, இணையத்தமிழ்வலையத்திலும் தொடர்ச்சியான பதிவுகள் வந்து மின்னூலென அவ்வப்போது தொகுக்கப்படவேண்டும். இப்படியான மின்னூலாக்கம், பிறமொழியின் சிறந்த அசைபடங்களின்மீதான - இவ்வாரப்பூங்காவிலே வெளியாகும் நந்தனின் 'One flew over the cuckoo's nest' மேலானது போன்ற- கருத்துப்பார்வைகளுக்கும் பொருந்தும்.

மேலும், இவ்வாரப்பூங்காவிலே சமாதானத்துக்கான நோபல்பரிசாளர் மீதான பத்ரியின் கட்டுரை, ஜான்பாபுராஜின் அசைபடப் பார்வை, தமிழ்நதியின் கவிதை, மா. சிவகுமாரின் தொழில்வாழ்க்கை மீதான பார்வை ஆகியனவும் இடம்பெறுகின்றன.

http://poongaa.com/component/option,com_magazine/Itemid,1/

http://poongaa.com/content/view/409/1/