Montag, Oktober 23, 2006

தொகுப்பாளரின் மேசையிலிருந்து

ஆசிரியர் குழு


Poonga ithazh - 6
23.10.2006
http://poongaa.com/component/option,com_magazine/Itemid,1/

பண்டிகைகள் வருவதும் பழங்காலத்திலே வால்வெள்ளி வருவதும் ஒன்றேதான். வரப்போவதையிட்டு எதிர்பார்ப்புகளோடு திட்டங்கள் தீட்டுவதும் வந்தபொழுதில் அதை உணரப் பொழுதின்றி சடங்குகளுக்குள் முயங்குவதும் சென்றபின்னால், கழிந்ததையிட்டுப் பேசுவதிலும் ஆகிவிடுகின்றது. பண்டிகை ஒன்றின் நோக்கு, ஒருவர் நாளும் தான் வாழமுடியாத எதிர்பார்ப்புகளுக்கு நாளொன்றேனுங் குறித்து தீனி போட்டு மகிழ்ந்திட முயற்சிப்பதுதான். ஆனால், சடங்குகள் - மதம் சார்ந்த பழையனவோ, களியாட்டம் சார்ந்த புதியனவோ - பண்டிகைகளின்போது, ஒருவரின் பொழுதினை அவருக்கென்று தனிப்பட்ட விட்டுக்கொடுக்க முடியாத அளவுக்கு அமுக்கிவிடுகின்றன. மதச்சடங்குகளின் வளையத்திலிருந்து ஓரளவுக்கு வெளியேறிய மக்கள், தொலைக்காட்சி, திரைப்படங்களின் வளையத்துக்குள்ளே நுழைந்து நெரிந்துகொள்ளும் அவலத்தினை அண்மைக்காலத்திலே கண்டுவருகிறோம். இன்னொரு புறம், அரசியற்சூழலின் அவலமும் அகதிச்சிதறலும் பலருக்கு இனிதான பழைய பண்டிகைத்தினங்களைப் புதிய பண்டிகைப்பொழுதினைத் துயர்பொழுதாக்கும் கூரிய ஆயுதங்களாகவும் மாற்றிவிடுகின்றன. இவ்வாரப்பூங்காவின் கட்டுரைகளும் சந்திரவதனாவின் கவிதையும் இவ்விடயங்களைச் சுற்றி எழும்பியிருக்கின்றன.

வீரவன்னியனின் 'சிவகாசிப்பிஞ்சுகள்' கட்டுரை பண்டிகைகளின் மிகவும் அறியப்பட்ட, கெடுதலான மறைமுக விளைவொன்றைப் பேசுகின்றது. பண்டிகைகளினை முன்னிட்டுக் கரியாக்கப்படும் மத்தாப்புக்களினதும் தீக்குச்சுகளினதும் உரசல்களிலே எரிந்துபோகும் பிஞ்சுகளின் அவலத்தினைப் பேசுகின்றது. இது குறித்தும் உடலளவிலும் உளமளவிலும் எரிந்துபோகும் இக்குழந்தைகள் குறித்து, அவ்வப்போது பேசப்பட்டாலுங்கூட, குறிப்பாக, இந்தியாவிலே குழந்தைகள் தொழில்புரிதல் தடைசெய்யப்பட்டிருக்கும் இம்மாதத்திலே இக்கட்டுரையின் அவசியம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. சிவகாசியின் தொழில்வளம் குறித்தும் பட்டாசுத்தொழிற்சாலைகள் தரும் பொருளாதாரம் பற்றியும் அள்ளித்தரும் தளமெதுவுமே இக்குழந்தைகள் பற்றிப் பேசாமலிருப்பது மிகவும் கவலைக்குரியதும் கவனிக்கப்படவேண்டியதுமாகும். சிவகாசிப்பிஞ்சுகள் கட்டுரை, தன்னளவிலே இளமையிலேயே கருகிப்போம் இம்மத்தாப்புகளின் இருப்பினை - இறப்பினை- மட்டுமே பேசினாலுங்கூட, இதற்காக இணையத்தமிழர்கள் என்ன செய்யமுடியுமென எண்ணுவதற்கான ஆரம்பப்பொறிப்புள்ளியாகவே நாம் இக்கட்டுரையை எடுத்துக்கொள்ளலாம். இதனோடு பூங்காவின் கவனத்தினை ஈர்த்த சபாபதி சரவணனின் ஆதங்கக்கட்டுரை அலட்சியத்தின் விளைவான குழந்தைகளின் அநாவசிய இறப்புகள் குறித்தது.




இக்குழந்தைத்துயரங்களுக்கு மாறாக, குழந்தைகளின் மகிழ்ச்சியினை அவர்களே மையப்படுத்தித் தெறிக்க, அஞ்சலி, மழலை ஆகியோரின் வண்ணமயமான உலகங்கள் உங்கள் முன்னே பூங்காவிலே சுழல்கிறன.


நடைமுறைக்கும் காலவோட்டத்துக்கும் தன்னை நல்லபடி இணைத்துக் கூர்த்துக்கொள்ளாத மொழி, சுவடிகளிலேமட்டும் உறைந்திருக்கும் மொழியாகச் செத்துவிடும். இக்கண்ணோட்டத்திலே, அண்மைக்காலங்களிலே தொழில்நுட்ப, அறிவியல், மருத்துவச்செய்திகளும் கட்டுரைகளும் விரிந்தும் ஆழங்கொண்டும் புதிதாகவும் பெயர்க்கப்பட்டும் தொழில்முறைசார்ந்தோரால் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கப் புறப்படுவது இணையத்தின் தனிச்சிறப்புக்குரியதெனலாம். மயூரன், கோபி, வஜ்ரா, வைசா ஆகியோரின் குறிப்புகள் இவற்றுள்ளே அடங்குகிறன. தன்னிலே வெளியாகும் படைப்புகளிலே இவ்வகையான கூறுகளுக்கு ஊக்கத்தினை அளிக்கப் பூங்கா ஆர்வம் கொள்கிறது. இந்த வாரத்துப்பூங்காவிலும் தமிழ்மணத்திலே திரட்டப்பட்ட படைப்புகளோடு, பூங்காவுக்கென்றே தனியாக பத்மா அர்விந்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் "பதின்மவயதினரின் போதைப்பொருள் அடிமைத்தனமும் சில தீர்வுகளும்" இணைந்துகொள்கிறது. பூங்கா வெளிவரத் தொடங்கியபோது குறிப்பிட்டபடி, இனி வரும் பூங்கா இதழ்கள், இதுபோன்ற தனிப்பட்ட சிறப்புக்கட்டுரைகளும் செவ்விகளும் பல்வேறு துறைகளிலும் உள்ளடங்கி வெளிவரும். இது பூங்கா வலைஞ்சிகையைத் தமிழ்மணம் திரட்டி சார்ந்த ஒரு தொகுப்பு இதழ் என்பதற்கும் அப்பால், ஒரு முழுமையான இதழாகப் பரிணமிக்கச்செய்யும்.


தமிழ் அரசியல் குறித்து சபேசன், திராவிடத்தமிழர்கள், குழலி, அருண்மொழி ஆகியோரின் கட்டுரைகள் பேசுகின்றன. தமிழின் நலன் குறித்த அரசியலைச் செய்கின்றோமென்று சொல்கின்ற அரசியல்வாதிகளின்மீது தமிழின் நலத்தின் பெயரினிலே கேள்விகளையும் மறுப்புகளையும் சபேசனும் அருண்மொழியும் முன்வைக்கின்றனர். இவர்களது கட்டுரைகள், தொடர்விவாதங்களுக்குரியன. மரணதண்டனை குறித்த ஆழமான, தமைத்தாங்கும் ஆதாரங்களுடனான பண்புநிறை பேச்சுமொழியிலமைந்த தொடர்விவாதக்கட்டுரைகளை எதிர்பார்ப்பதுபோலவே, இக்கட்டுரைகள்மேலும் பூங்கா வரும் வாரங்களிலே பதிவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

உமா கதிரினது தெருக்கூத்துமீதான ஞாபகம், பழைய பயில்கலைகளைத் தானும் மீட்டுப்பார்த்து வாசகர்களுக்கும் ஞாபகத்துக்குக் கொணரும் ஒரு நல்ல தொடக்கம். தமிழ்நிலத்திலே முளையிட்டுத் தொடங்கியும் நாற்றாகப் புகுந்தும் அழிந்து போகும் பழங்கலைகளைப் பேணலும் பதிவு செய்தலும் அண்மைக்காலத்திலே பதிப்பேடுகளிலே வரவேற்புப் பெறுகின்றன. இதுபோன்று, இணையத்தமிழ்வலையத்திலும் தொடர்ச்சியான பதிவுகள் வந்து மின்னூலென அவ்வப்போது தொகுக்கப்படவேண்டும். இப்படியான மின்னூலாக்கம், பிறமொழியின் சிறந்த அசைபடங்களின்மீதான - இவ்வாரப்பூங்காவிலே வெளியாகும் நந்தனின் 'One flew over the cuckoo's nest' மேலானது போன்ற- கருத்துப்பார்வைகளுக்கும் பொருந்தும்.

மேலும், இவ்வாரப்பூங்காவிலே சமாதானத்துக்கான நோபல்பரிசாளர் மீதான பத்ரியின் கட்டுரை, ஜான்பாபுராஜின் அசைபடப் பார்வை, தமிழ்நதியின் கவிதை, மா. சிவகுமாரின் தொழில்வாழ்க்கை மீதான பார்வை ஆகியனவும் இடம்பெறுகின்றன.

http://poongaa.com/component/option,com_magazine/Itemid,1/

http://poongaa.com/content/view/409/1/

Keine Kommentare: