Donnerstag, April 08, 2004

என் மூக்கு

வாசகர் கடிதம் பகுதியில்தான் காரம் ஜாஸ்தி.

தன் படைப்புக்கு பின்னூட்டமாய் வந்த ஜீவமுரளியின் கடிதத்தை, சந்திரவதனா பிரசுரித்து, அதற்கு தன் பதிலையும் அளித்துள்ளார். அவருடைய கதையை நான் படிக்கவில்லை ஆயினும், அவர் கடித்திலிருந்து என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க் முடிகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை இந்தியர்கள் சற்று இளக்காரமாக்த்தான் பார்க்கிறார்கள் என்று நானும் கருதுகிறேன். வளர்ப்பு சார்ந்தும், படிப்பு சார்ந்தும்தான் குணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று நாம் என்னதான் தத்துவம் பேசினாலும், ஒருவருடைய முகத்தையும், உடலமைப்பையும், நிறத்தையும், பார்த்துத்தான் பெரும்பாலானவர்கள் பற்றிய முடிவுக்கு வருகிறோம். 'மிஸ்ஸிஸிபி மசாலா ' என்ற படத்தில் உள்ள ஒரு இந்தியப் பெண் கதாபாத்திரத்தை பார்த்து டென்ஸல் வாஷிங்டன் ஒரு கேள்வியைக் கேட்பார். பளாரென்று அறையும் கேள்வி அது.

தமிழ்நாட்டில் கூட சாதி ரீதியான பாகுபாடுகள் பார்ப்பதாக, பிராமணர்களை சாடும் பெரும்பாலானோர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கும் கொடுமைகளை வச்தியாக மறந்து விடுகின்றனர். தான் ஒரு தாழ்ததப்பட்ட சாதியை சேர்ந்தவரை எப்படி அணுகுகிறோமோ , அதைப் போலத்தான் பிராமணர்கள் தன்னை அணுகுவார்கள் ' என்று ஒரு பிள்ளைக்கோ, தேவருக்கோ, வன்னியருக்கோ, முதலியாருக்கோ தோன்ற வேண்டும். அது தோணாதவரை, குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. ஜாதி தரும் அந்தஸ்து தனக்கு, வேண்டுமென்றால் , அது எல்லாருக்கும் வேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஜீவமுரளியின் கடிதத்தில் இருந்த 'யாழ்ப்பாண கிடுகுவேலி மனோபாவம்தான் கறுப்பர்களை வெறுக்கச்செய்கிறது ' என்ற வரிகள் யாழிலும் இத்தகைய தமிழ்நாட்டு மனோபாவம் நிரம்பிக் கிடப்பதை குறிப்பதாகக் காண்கிறேன். அந்த வரியின் முழு அர்த்தம் விளங்காவிடினும், ' யாழ்ப்பாணத் தமிழர் மலையக / கொழும்புத் தமிழர்களை சற்று இளக்காரமாகத்தான் நினைக்கிறார்கள் ' என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்தான் இருக்கிறது.

உன்னிப்பாகப் பார்த்தால் , உலகமெல்லாம் நீக்கமற இறைவன் நிறைந்திருக்கிறானோ இல்லையோ,
இம் மாதிரியான சாதி, இன, மத , நிற ரீதியான வேறுபாடுகள் நிறைந்து காணப்படுவது தெளிவாகத் தெரியும்.

இதன் தொடர்பில் நான் முன்பொருமுறை கிறுக்கியது இங்கே.....

posted by NPSR @ 2:33 PM
Wednesday, April 07, 2004

திசைகளில் வெளியான கதையில் பிரதேசவாதம்?

திசைகள் மின்னிதழில் வெளியான எனது பயணம் சிறுகதைக்கு
ஜீவமுரளியின் எதிர்வினையும் அவருக்கான எனது பதிலும் இம்முறை திசைகளில் வெளியாகியுள்ளது.
அதை இங்கேயும் பதிக்கிறேன்.


தோழமையுடன் சந்திரவதனாவிற்கு

ஒரு ஆப்பிரிக்க ஆண்தனத்திற்கும், வெள்ளைக்கார ஆண்தனத்திற்கும் வித்தியாசங்கள், அல்லது ஆசிய மதிப்ணபீடுகளின் பெறுபேறுகள் என்னவென்றால் எங்களின் வெள்ளைத்தோல் அடிமை மனநிலைதான்.

ஒரு ஆணின் புத்தி என்ற வகையில் உங்களின் மதிப்பீட்டுடன் உடன்படுகிறேன்.;ஒரு ஆபிரிக்கன் என்ற உங்களின் இனவாத உணர்வுப்புத்தியின் கீழ் வெளிப்படுவனவெல்லாம் யாழ்ப்பாண கிடுகு வேலி விசயங்களே.

இனவாதமும் சாதிவெறியும் எந்த இலக்கியவாதியையும் விட்டுவைப்பதில்லை

அன்புடன்
ஜீவமுரளி

------------------------------------------------------------------------------------

வணக்கம் ஜீவமுரளி!

உங்கள் தோழமை நிறைந்த கருத்துக்கு மிகவும் நன்றி.

இனம், மதம், தேசியம், நாடு என்ற பேதமின்றி எங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்தம் குணங்களும் இந்நாட்டவர் நல்லவர் என்றோ அல்லது இந்நாட்டவர் கெட்டவர் என்றோ சொல்ல முடியாதபடிக்கு எல்லோரும் மனிதர்கள் என்பதற்கமைய பல்வேறு இயல்புகளைக் கொண்டுள்ளது.

ஆனால் பழக்கவழக்கங்களும், பண்புகளும் அந்தந்த நாட்டுக்கேற்ப, நகருக்கேற்ப, கிராமத்துக்கேற்ப, மதத்துக்கேற்ப......... என்று மாறுபடுகிறது.

திடீரென்று புரியாத பாசையில் கதைக்கும் பெரிய சத்தம் கேட்டது. ம்...... புகையிரதம் நின்றது கூடத் தெரியாமல்........நான். அதற்கிடையில் அடுத்த தரிப்பு நிலையம் வந்து விட்டது. ஏறுவோரும் இறங்கியோரும் தத்தமது திசைகளில் வெளியில் விரைய.. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சில பெண்களும் ஒரு ஆடவனும் தமது உயர்ந்த குரல்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமே என்ற எந்தவிதப் பிரக்ஞையுமின்றி அடிக்குரலில் உரத்துப் பேசியபடி நானிருந்த பெட்டியினுள் ஏறினார்கள்.

இவன் ஆப்பிரிக்க நாட்டவன் என்பதாலோ என்னவோ எனக்கு விருப்பமில்லையென்று சொன்ன பின்னும் - தொலைபேசி இலக்கத்தைத் தருகிறாயா..? முகவரியைத் தருகிறாயா..? - என்று கரைச்சல் படுத்திக் கொண்டே இருந்தான்.

எனது கதையில் வந்த இந்த வரிகளில் ஆபிரிக்க நாட்டவரின் பண்போ அன்றிப் பழக்கவழக்கமோதான் சுட்டப் படுகிறது. ஆபிரிக்க நாட்டவன் கூடாதவன் என்ற தொனி எந்தக் கட்டத்திலும் இல்லை.

இதற்குள் பிரதேசவாதத்தையோ அல்லது இனவாதத்தையோ பார்க்க முனைந்த உங்கள் மனதுள்தான் இனவாதம் தொனிக்கிறது. யாழ்ப்பாணக் கிடுகுவேலி என்ற உங்கள் வார்த்தையில் தொனிக்கும் கடுப்பில் உங்கள் பிரதேசவாதமும், வெள்ளைத்தோல் அடிமைநிலை என்ற உங்கள் வார்த்தையில் தொனிக்கும் எரிச்சலில், வெள்ளைத்தோலின் மேல் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பும் கறுப்புத்தோலின் மேல் நீங்கள் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையும் அதனால் ஏற்பட்ட அடிமை மனப்பான்மை உணர்வுகளும் தெரிகின்றன.

ஐரோப்பியர்களை இனத்துவேசம் பிடித்தவர்கள் என்றும் கலாச்சார சீரழிவாளர்கள் என்றும் சொல்லித் திட்டும் பல ஆசியரை நான் சந்தித்துள்ளேன். உண்மையில் இந்த இனத்துவேசம் என்பது இப்படித் திட்டும் ஆசியர்களிடம்தான் குறிப்பாக எமது இனத்திடம்தான் அதிகமாக உள்ளது என்பதை நான் அடித்து வைத்துச் சொல்லுவேன்.

ஓரு ஐரோப்பியனின் நல்ல பண்புகளை நல்ல கண் கொண்டு பார்க்கத் தெரியாதவர்கள்தான் இப்படி வெள்ளைத்தோல், கறுப்புத்தோல் என்று பேச முற்படுவார்கள்.

ஒரு ஐரோப்பியனுக்கு உள்ள பண்புக்கும் ஆப்பிரிக்கனுக்கு உள்ள பண்புக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு. அதை நீங்களோ நானோ மறுக்க முடியாது. ஐரோப்பியன், ஆபிரிக்கன் என்று மட்டுமல்ல நான் மேலே குறிப்பிட்டது போல பழக்கவழக்கங்களும், பண்புகளும் அந்தந்த நாட்டுக்கேற்ப, நகருக்கேற்ப, கிராமத்துக்கேற்ப, மதத்துக்கேற்ப......... வளர்ந்த சூழ்நிலை, வளர்க்கப் பட்ட விதம், பிறந்ததிலிருந்தே அவர்களோடு ஊறிய சில நடைமுறைகள் என்பவற்றைப் பொறுத்து மாறுபடும்.

ஐரோப்பியரிடம் ஒரு பொது இடத்தில் பேசும் போது மற்றவர்களைத் தொந்தரவு பண்ணாத விதமாக மெதுவாகப் பேசும் தன்மை உண்டு. ஆப்பிரிக்கரிடமும், துருக்கியரிடமும் மற்றவர்கள் பற்றிய பிரக்ஞை இன்றி பொது இடங்களில் தமது பாசைகளில் உரத்துப் பேசும் தன்மை உண்டு. விதிவிலக்காக இவர்களில் ஒரு சிலர் இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்திடம் திருத்திக் கொள்ளப்பட வேண்டிய இந்தக் குறைபாடுகள் நிறைந்த தன்மைகள் நிறையவே உள்ளன. இதே போல ஆசியர்களிடமோ அன்றி, ஆப்பிரிக்கர்களிடமோ உள்ள நல்ல பண்புகளில் சில ஐரோப்பியர்களிடம் இல்லாமல் இருக்கிறது. இங்கு இனவாதமோ நிறபேதமோ கருத்தில் கொள்ளப் படத் தேவையில்லை. பிறப்பிலிருந்தே அவரவர்களோடு கூட ஒட்டி வந்த சில பழக்க வழக்கங்கள் அவர்களைப் பண்புகளால் பிரிக்கிறது.

உதாரணத்துக்கு எங்களுக்கு முந்தைய தலைமுறை எமது தலைமுறையை அடித்துத்தான் படிக்க வைத்தார்கள். - அடியாத மாடு படியாது - என்று சொல்லி கண்டிப்பாக அடித்துத்தான் வளர்க்க வேண்டும் என்பது போன்றதொரு மாயையை எம்முள் கூட ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். இதன் காரணமாக இன்றும் கூட ஐரோப்பியாவில் கூட எம்மவர் தமது பிள்ளைகளின் பிரச்சனைகளின் போது முதல் ஆயுதமாக - அடி - யைத் தான் கையாள்கிறார்கள். இதுவே ஒரு ஐரோப்பியனாக இருந்தால் பிரச்சனை என்றதும் பிள்ளை பாடசாலையால் வந்ததும் முதலில் அவனைச் சாப்பிட வைத்து அதன் பின் இன்று உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்லி அதற்கொரு நேரத்தைக் குறித்து அதன் பின் வீட்டிலோ, அல்லது வெளியில் நடந்தோ, அல்லது ஒரு பூங்காவிலோ மிகவும் அமைதியாகவும், ஆறுதலாகவும் பேச்சைத் தொடங்கி... பிரச்சனையைப் பற்றிப் பேசி, பிள்ளையின் மனநிலையை அறிந்து.... பிரச்சனை தீர்க்கப் படுகிறது. (100வீதமான ஐரோப்பியப் பெற்றோர்களும் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்றோ இது விடயத்தில் பிழை விடமாட்டார்கள் என்றோ சொல்வதற்கில்லை. விதிவிலக்குகள் எங்கும் உண்டு.) இதுவே ஒரு தமிழன் வீட்டில் என்றால் இது ஒரு பிரளயமாகி விடும். இந்தப் பண்பு அதாவது பிள்ளைகளின் பிரச்சனைகளைக் கையாளும் பண்பு கூட நாட்டுக்கு நாடு வேறு படுகிறது.

இதே நேரம் ஒரு ஆப்பிரிக்கனோ அன்றி ஒரு ஆசியனோ சிறு வயதிலிருந்தே ஐரோப்பியாவில் வாழும் நிலை ஏற்படும் போது அவனது பண்பு இன்னும் வேறு விதமாக இருக்கும். தந்தையைப் போல பொது இடத்தில் சத்தம் போட்டுப் பேச மாட்டான். ஏனெனில் அவன் ஐரோப்பியரின் பண்பையும் பார்த்துக் கொண்டே வளர்கிறான். அவனது பண்புகள் அவன் வீட்டுக்குள் நடைமுறையில் இருக்கும் சில பண்புகளும், ஐரோப்பியப் பண்புகளும் கலந்து தனது வசதிக்கேற்ப தெரிவு செய்யப் பட்டு நல்லதோ கெட்டதோ வேறுபட்டதாகவே இருக்கும்.

இதே போலத்தான் பெண்களை அணுகும் முறையிலான பண்புகளும் ஆணின் குணம், அல்லது பெண்ணின் குணம் என்பதோடு மட்டும் நின்று விடாது இனம் மதம் இடத்துக்கேற்பவும் வேறுபடுகிறது.

உதாரணத்துகுக்கு ஒன்று சொல்கிறேன்.

இது சில மாதங்களின் முன் லண்டனில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம். கணவனை இழந்த அந்தத் தமிழ்ப்பெண் 12 வருடங்களாக அந்த அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு அதுவரை கடமையில் இருந்த அனைத்து ஆங்கிலேயர்களும் அப்பெண்ணின் நிலையையும், நல்ல குணத்தையும் கவனத்தில் கொண்டு அவரோடு மிகவும் கண்ணியமாகவும், நட்பாகவும் பழகி வந்தார்கள். கணவன் இல்லை என்ற காரணமோ அல்லது பெண் என்ற காரணமோ அப் பெண்ணுக்கு அதுவரை அங்கு ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தவே இல்லை. 12 வருடங்களின் பின் முதன் முதலாக அங்கு ஒரு திருமணமான தமிழன் வேலைக்கு வந்து சேர்ந்தான். அந்தப் பெண் நட்பாகத்தான் அவனைப் பார்த்துச் சிரித்து வைத்தாள். அடுத்த நாளே அந்தத் தமிழன் இடைவேளையின் போது அவள் மேசைக்கு வந்து கதை கொடுத்து கணவன் இல்லாமல்தானே இருக்கிறாய் இரவுகளுக்கு நான் துணையாகிறேன் என்ற கருத்துப் படப் பேசினான். அந்தப் பெண் எவ்வளவோ சொல்லியும் அவன் அவளைத் தொந்தரவு செய்வதை நிறுத்தவேயில்லை................ இப்படி நடந்து கொண்டவன் ஆயிரத்தில் ஒரு தமிழன் அல்லது லட்சத்தில் ஒரு தமிழன் என்று நீங்கள் கூறலாம். ஆனால் ஐரோப்பியர்களை விட, கலாச்சாரம் பற்றி வாய்கிழியப் பேசும் எமது தமிழர்களிடம்தான் இந்தப் பண்பு அதிகமாய் உள்ளது.

இது போலத்தான் எனது கதையில் நான் குறிப்பிட்ட பண்பும். ஆண் பெண் மனிதன் என்பதற்கு மேலால் இடத்தோடும் வளத்தோடும் ஒட்டிய பண்பும் நிட்சயமாக ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது.

கறுப்புத்தோல் வெள்ளைத்தோல் என்ற பாகுபாடு வெள்ளையர்களை விட கறுப்பர்களிடம்தான் நிறைய உண்டு. கறுப்புத்தோலுக்கு அவர்கள் தரும் மதிப்பை வெள்ளைத்தோலுக்கு உங்கள் போன்ற எம்மவர்கள் கொடுப்பதில்லை.

இதற்குள் அவர்களுக்குத் துவேசம் என்ற கூற்று வேறு. வெள்ளையர்களின் நல்ல பண்புகளைப் பற்றிப் பேசினாலே மனசு பொறுக்காத எம்மவர்கள்தான் உண்மையில் சரியான துவேசம் பிடித்தவர்கள்.