Dienstag, Juli 06, 2004

ஈழத்துப் பூக்கள் - Eelanathan

இணையத்தமிழின் வளர்ச்சிக்கு ஈழத்தமிழர்களும் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள் என்று கூறப்படுகிறது அது எந்தளவுக்கு உண்மை என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் இந்த யோசனை தோன்றியது.வலைப்பதிவுகளையே ஆராய்ந்து பார்க்கலாம் எத்தனை ஈழத்தமிழர்கள் இதில் பங்களிப்புச் செய்கிறார்கள் என ஒரு கணக்கெடுப்பு நடத்திவிடலாம் என யோசித்தேன் இது எந்தவிதத்திலும் ஈழத்தமிழர்களை மற்றவர்களிடமிருந்து பாகுபடுத்த அல்ல சும்மா ஒரு கணக்கெடுப்பு அவ்வளவே

வலைப்பதிவாளர் பட்டியல் வரிசையில் ஆரம்பிக்கிறேன்

********************************************************

அஜீவன்
எச்சில் போர்வை நிழல் யுத்தம் போன்ற குறும் படங்களின் இயக்குனர்.அண்மையில் நியூஜெர்சி சிந்தனை வட்டத்தினரால் நடத்தப்பட்ட குறும்பட விழாவில் இவரது படமும் இடம்பெற்றது.குறும்படங்கள் பற்றிய தொழில்நுட்ப விளக்கங்களையும்.பெண்ணியம் சம்பந்தப்பட்ட பார்வைகளையும் தனது பதிவில் தருகிறார்.அண்மைய பதிவு படங்களை மெருகேற்றல் சம்பந்தமான மென்பொருட்களுக்கான சுட்டியாக அமைகின்றது.
*********************************************************

சந்திரலேகா
பெண்ணியவாதியாக மட்டுமல்ல தமிழரின் கலை பண்பாட்டு ரீதியான ஆய்வுக்கட்டுரைகளுக்கும் பேர் பெற்றவர்.திண்ணை மின்னிதழிலும் தோழியர் கூட்டுப்பதிவிலும் இவரது கட்டுரைகள் தொடராக வெளிவருகின்றன அவற்றையே தனது புத்துயிர்ப்புப் பதிவில் பதிந்துள்ளார்.அண்மைய பதிவு வண்ணங்கள் சொல்வதென்ன என்ற பதிவு வண்ணங்களின்றி மனித வாழ்கை இல்லை என்கிறார்.
*********************************************************

சந்திரவதனா
ஒன்றா இரண்டா சொல்லுவதற்கு அநேகமான மின்னிதழ்கள் இணைய இதழ்கள் புலம்பெயர் நாட்டுச் சஞ்சிகைகள் ஆகியவற்றில் அடிபடும் முகம்.திசைகள்,தமிழோவியம்,பதிவுகள் இதழ்களிலும்,யாழ் இனையத்திலும், தோழியர் கூட்டுப்பதிவிலும் இவரது சிறுகதைகள் கவிதைகள் ஆகியவை வெளிவருகின்றன.தனது மன ஓசைகளுக்கென்று ஒரு பதிவையும் படித்தவை, பெண்கள்,புனரமைப்பு என்று பத்திற்கும் மேற்பட்ட பதிவுகளை வைத்திருக்கிறார் மன ஓசை வலைப்பதிவில் அனைத்துக்குமான சுட்டிகள் கிடைக்கும்.அண்மைய பதிவு தனது பேர்த்தி சிந்து.அவரே ஒருகவிதை மாதிரி இருக்கிறார்
*********************************************************

ஈ வரிசையில் என்னுடைய இரு பதிவுகள் தன்னடக்கம் கருதிச் சொல்லாம்ல் விட்டுவிடுகிறேன்.
*********************************************************

இளைஞன்
பெயருக்கேற்ற மாதிரியே இளமைத் துடிப்பானவர்.பதிவுகள் வார்ப்பு போன்றவற்றில் ஒன்றிரண்டு கவிதைகள் பார்த்திருக்கிறேன்.இலைஞர்களுக்கென்றே ஒரு தனித் தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் புதியதோர் உலகம் செய்வோம் என்பது இவரது மகுடவாக்கியம்.குறும்பூ என்றெ தனது வலைப்பதிவுக்குப் பெயரிட்டு குறும்பாகவே பதிந்தும் வருகிறார்.அண்மைய பதிவு சேகுவேராவின் கவிதை ஒன்று.
*********************************************************

ந.பரணீதரன்
கரவை பரணியின் பூ மனசு என்ற பெயரில் கறுப்பு நிலவு என்ற தலைப்புமிட்டு தனது காதற்கவிதைகளைப் பதிந்து வந்துள்ளார்.யாழ் தளத்தில் இவரது கவிதைகள் பலவற்றைப் பார்க்கலாம். அண்மைக்காலமாக தளத்தை மாற்றி யாழ் தளத்தில் எழுதுகின்றார் அங்கேயும் தொடரும் அவரது காதல் கவிதைகள்.அண்மைக்காலமாக பதிவுகள் எதனையும் காணவில்லை கடைசிப்பதிவு திருகோணமலை நகரின் அழகுக் காட்சி.
*********************************************************

கரிகாலன்
தமிழ் வலைப்பதிவுகளுக்குப் புதுவரவு.என்றாலும் சரளமான நடையில் கனடாவிலிருந்து உள்ளூர் செய்திகளையும் ஈழத்துச் செய்திகளையும் என் மனவெளியில் என்ற தனது பதிவில் பதிந்து வருகின்றார்.அண்மைய பதிவு கஞ்சா கட்சி என்னும் கனடிய கட்சி ஒன்றைப் பற்றியது.
*********************************************************

சந்திரமதி
இவரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்வது ஈராக்கில் எண்ணை விற்பது போன்றது என்றாலும் பாராபட்சம் பார்க்காமல்... நாங்கள் இப்போது கௌரவ ஆசிரியர் பணியில் இருக்கும் வலைப்பூ வலைப்பதிவாளர் இதழின் ஆசிரியர்.தமிழ் வலைப்பதிவாளர்களுக்கென்று ஒரு பட்டியலை ஆரம்பித்து அதனை ஆக்கபூர்வமாகப் பேணி வருபவர்.எனது பின்னூட்டச்சத்தாளர் கட்சியின் வட்டச்செயலாளர்.இன்னும் இன்னும் சொல்லலாம் ஆயினும் அக்காவைப் பற்றித் தம்பி புகழுதல் ஆகாது என்பதால் நிறுத்துகின்றேன்.எண்ணங்கள் என்ற பெயரில் எழுதுப்பயிற்சிக்கூடம் நடத்தி வேப்பம் வடகம் பற்றிப் பதிந்து எனது வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டவர்.திரைவிமர்சனம் என்ற பெயரில் ஆங்கிலத் திரைப்படங்களைக் கடித்துக் குதறுகின்றார் என்று கேள்வி.
*********************************************************

மயூரன்
இலங்கையிலிருந்து வலைபதிபவர்.தமிழைக் கணனிமயப்படுத்தும் செயல்களில் இவரது பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.அது பற்றிய தகவல்கள் மட்டுமன்றி பெண்ணியம் வர்த்தகம் போன்ற பல்வேறு விடயங்களில் தனது கருத்தை ம் என்னும் பதிவில்செய்து வருகிறார் அண்மைய பதிவு தமிழ் வலைப்பதிவாளர் விபரக்கொத்து அமைக்கப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் பதிவு.
*********************************************************

முல்லை
இது இவரது இயற்பெயர் இல்லை என்பது இவரது பதிவுகளில் தெரிகிறது ஆயினும் நீன்ட நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட குறிஞ்சி வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர்.பலகாலமாக அஜீவனுடைய குறும்படங்களின் மீதான விமர்சனத்துடன் நின்று போயிருந்த இவரது பதிவுகள் ஈழத்தில் இவரது ஊரில் நடந்த சுவையான சம்பவங்களினைத்தாங்கி புதுப்பொலிவுடன் வெளிவருகிறது.அண்மைய பதிவு சந்தைக்கு வந்த கிளி என்ற தலைப்பில் தான் மீன் வாங்கப்பேரம் பேசிய கதையைச் சொல்கிறார்.
*********************************************************

மூனா
இவரது முழுப்பெயர் தெரியவில்லை.அரசியல் கருத்தோவியங்கள் வரைந்து உள்ளங்களைக் கவர்பவர் கிறுக்கல்கள் என்று தலைப்பிட்டாலும் சித்திரங்கள் கூறும் கருத்துகள் அர்த்தம் நிறைந்தவை இலங்கை அரசியல் புரிந்தவர்களுக்கே புரியும்.புலம்பெயர் நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.யுகம் மாறும் தொகுப்பில் பல ஓவியங்கள் கருத்தையும்கண்ணையும் கவர்பவையாக இருக்கின்றன யாழ் இனையத்தளத்திலும் சில ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.துகிலிகை என்ற பெயரில் இன்னொரு பதிவு வண்ண வண்ண ஓவியங்களுக்காக வைத்திருக்கிறார்.அண்மைய சித்திரம் சத்தியமாய்த் தெரியாது என்ற தலைப்பில் அண்மையில் அரசுகளின் உதவியுடன் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கருணா விவகாரம் பற்றியது.
*********************************************************

நிர்வியா
புது வரவு சந்திரவதனா அவர்களுடைய கதைகளுக்கும் எழுத்துகளுக்கும் தான் ரசிகை என்றே ஆரம்பித்திருக்கிறார்.சின்னச் சின்ன அழகான கவிதைகள் படைக்கிறார் அண்மைய பதிவும் ஒரு கவிதைதான்.
*********************************************************

ராஜன் முருகவேல்
ஆரம்பத்தில் ஐஸ்கிறீம் சிலையே நீதானோ என்று தொடர்கதை பதிந்து நெஞ்சங்களை அள்ளிச் சென்றவர் அதன் பின்னர் நீண்ட காலம் தலைமறைவாக இருந்துவிட்டு அனுபவம் புதுமை என்ற தலைப்பில் புலம்பெயர் நாட்டில் பெற்ற சுவாரசியமான அனுபவங்களைத் தொடராகப் பதிந்தார் என்ன காரணமோ தெரியாது மறுபடியும் காணாமற் போய்விட்டார்.இவரது எழுத்துக்கள் பூவரசு சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன.யாழ் தளத்திலும் இவரது ஆக்கங்களைப் பார்க்கலாம்.
*********************************************************

ரமணீதரன்
நண்பர்களால் செல்லமாக முதிரும் அலைஞன் அல்ல என்றும் முதிரா வினைஞன் என்று அழைக்கப்படுபவர்.வசியம் செய்யும் எழுத்துக்குச் சொந்தக்காரர்(அதில் மயங்கியதில் நானும் ஒருவர்) இவரது நகைச்சுவை இறைத்திருக்கும் பதிவுகளை பதிவுகள் தளத்திலும் சில தொகுப்பு நூல்களிலும் பார்க்கக் கிடைத்தது கவிதை கதை மட்டுமல்ல கட்டுரைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் இந்தக் கலக்கி கொஞ்சம் வித்தியாசம் மற்றவர் வயிற்றில் புளி கலக்குவது அதுதான் இவரது பொய்சார் ஊடகங்களின் முகத்திரை கிழித்தல்.அதனை விட ஈழத்து இலக்கியங்களுக்கென்று தனிப்பதிவும்.தனது பினாத்தல்களுக்கென்று ஒரு பதிவும் வைத்திருக்கிறார்.என்னுடைய பின்னூட்டச்சத்தாளர் கட்சியின் உபதலைவர்.அண்மையில் கஞ்சிக்குடிச் சாமியார் என்ற பட்டத்துடன் காணமற் போய்விட்டார் அவ்வப்போது பின்னூட்டப்பெட்டிகளில் தலைகாட்டும்போது பார்த்துக்கொண்டால் சரி.
*********************************************************

சண்முகி
இவரும் வலைப்பதிவுகளுக்குப் புது வரவு ஆனால் அலைகள் தளத்தில் இவரது கவிதைகள் சில படித்திருக்கிறேன்.கவிதை கதை இரண்டிலும் தனது முத்திரை பதித்து வருகிறார்.அண்மைய பதிவு எனக்குள்ளும் ஒரு ஆசை என்கிற கவிதை.
*********************************************************

குருவிகள்
இயற்பெயர் இதுவல்ல என்று பார்த்த மாத்திரத்திலேயே புரிந்திருக்கும்.குருவிகளின் விஞ்ஞான உலகு என்ற பெயரில் அறிவியல் செய்திகளை அழகூட்டும் படங்களுடன் அள்ளி வழங்கி வருகிறார்.இது அறிந்த செய்தி அறியாததும் ஒன்றுண்டு அழகழான மலர்களுடன் குருவிகளின் காதல்,உலகச்செய்திகள்,கவிதைகள் எல்லாவற்றையும் இன்னோர் பதிவாக தேடற்சரம் என்ற பெயரில் பதிகிறார் தள வடிவமைப்பிற்கு தனியாக ஒரு பாராட்டு.
*********************************************************

ஷ்ரேயா
என்னுடைய மருமகளாக இருந்து நேற்றிலிருந்து அக்காவாக ஆகிப்போனவர்.தமிழ் வலைப்பதிவுகளுக்குப் புதுவரவு ஆனாலும் சகஜமாகப் பழகுவதிலிருந்து எழுத்துலகிற்கு இவர் புதிதல்ல என்று தெரிகிறது மழை:சின்னச் சின்ன அழகான தருணங்கள் என்று தம் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.அண்மைய பதிவு உதட்டுச் சாத்திரம் பார்க்கிறார் உங்கள் பதிவுக்கு முந்துங்கள்.
*********************************************************

சுரதா
இவரைப்பற்றிச் சொல்வதும் மதி அக்காவைப் பற்றிச் சொல்வதும் ஒன்றுதான் இவர் புண்ணியத்தில்தான் நான் இன்று தமிழில் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன்.தமிழ்ச் செயலிகளுக்கு நன்கு அறியப்பட்டவர் யாழ் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர்.தனக்கென்றே பிரத்தியேகமாக சுரதா இணையம் என்று வைத்திருக்கிறார்.தமிழ்ச் செயலிகளின் அணிவகுப்பாக ஆயுதம் என்ற வலைப்பதிவையும் மருத்துவம் என்ற வலைப்பதிவையும் நடத்தி வந்தவர் அண்மைக்காலமாக இரண்டுமே தொடராமல் நிற்கிறன.யாராவது பார்த்தால் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்.
*********************************************************

சுரேன் நடேசன்
தமிழ் வலைப்பதிவுலகத்திற்குப் புதுவரவு எனக்கோ பழைய உறவு.என்ன எழுதுவதென்றே தெரியவில்லை என்று ஒரு பதிவைப் போட்டுவிட்டு முழித்துக்கொண்டிருந்தாரே பார்த்து எம்முடைய திறமையைக் காட்டுவோம் என்று போனால் மளமளவென்று பல்வேறு துறைசார் பதிவுகளையும் இட்டு பலரையும் இழுத்துவிட்டார்.இப்போது கோடை விடுமுறையில் ஊர்சுற்றிப்பார்க்கப்போயிருக்கிறார்.திரும்பவும் வந்து பலவற்றை அள்ளி வழங்குவார் என எதிர்பார்ப்போம்.
*********************************************************

திவாகரன்
நிலாமுற்றத்தில் விளையாடி கடந்த ஏப்ரலோடு காணமற்போய் விட்டார்.யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்.
*********************************************************

தமிழினி
இயற்பெயர் என்று தெரியவில்லை தேடியில் அகப்பட்ட பதிவு.சிந்திக்கச் சில வரிகள் என்றும் சில கவிதைகளும் பதிந்து வைக்கிறார் இன்னும் எதிர்பார்க்கலாம்
*********************************************************

வெப்தமிழன்
அப்பாடா வீரத்தமிழன்,ஆதித்தமிழன் என்ற பெயரெல்லம் பழையதாகி புதிதாக வந்திருக்கிறார் வெப்தமிழன்.வெப்தமிழன் என்ற இணையத்தளத்துக்குச் சொந்தக்காரர்.ஒரு தமிழனின் வலைக்குறிப்புகள் என்ற பெயரில் பதிந்து வருகிறர் அண்மைய பதிவு நமது ஈழநாடு பத்திரிகை யுனிக்கோட்டுக்கு மாறியது பற்றியது தொடர்ந்தும் நல்ல தகவல்களைத் தருவார் என எதிர்பார்க்கலாம்.
*********************************************************

யாழ் சுதாகர்
கேள்விகளுக்கும் விடைகளுக்கும் தனிப்பதிவு வைத்திருக்கிறார்.புத்தகம் கூட திருவாளர் சௌந்தரநாயகம் கையால் வெளியிட்டு வைத்திருக்கிறார்.கே.எஸ் ராஜாவுக்கும்,டி.எம்.எஸ் இற்கும் தனி வலைப்பதிவுகள் வைத்திருக்கிறார்(இவர் ஈழத்து உறவா என்பதில் சந்தேகம் சுரதா அண்ணன் பதில் சொல்வாரா)
*********************************************************

கௌசிகன்
ஈழத்து வரவு என்று தெரிகிறது.மூன்று கவிதைகளுடன் காணமர் போய்விட்டார் திரும்பி வந்தாரானால் நிறையக் கவிதைகளை எதிர்பார்க்கலாம் போலுள்ளது.
*********************************************************

கூட்டு வலைப்பதிவுகள்

தோழியர் பதிவில் ஈழத்து அம்மணிகள் பலர் எழுதி வருகிறார்கள் இங்கூ ஏற்கனவே குறிப்பிட்டவர்களில் சந்திரவதனா,சந்திரமதி,சந்திரலேகா தவிர றஞ்சி(எல்லோருக்கும் பின்னால் அக்கா சேர்த்துக்கொள்ளவும் ஏற்கனவே அம்மையார் என்று சொல்லி ஆளாளுக்கு தர்ம அடி போட்டு வாங்கி வந்திருக்கிறேன்) ஆகியோர் எழுதுகிறார்கள் இதில் றஞ்சி(சுவிஸ்) தவிர மற்றவர்களுக்கு வலைப்பதிவு உண்டு அவரையும் வலைப்பதிவுகளுக்கு இழுத்துவரும் பொறுப்பை எனது அன்பான அக்காவிடம் ஒப்படைக்கிறேன்.
*********************************************************

சூரியன் வலைப்பதிவும் ஈழத்தவர்களுடையது. ஈழத்தவர்கள் தான் எழுதலாம் என்ற எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது ஆயினும் இரண்டு பதிவுகளுடன் நின்றுவிட்டது.தொடரும் என எதிர்ப்பார்ப்போம்.
*********************************************************

யாழ்நெற் என்னும் கூட்டு வலைப்பதிவும் சுரதா மற்றும் மோகன் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது சின்னச் சின்ன குடில்களாக நிறையப்பேர் உட்கார்ந்திருக்கிறார்கள் சில நல்ல கவிதைகளும் கட்டுரைகளும் தென்பட்டன.
*********************************************************

தவறுதலாக எவருடைய பெயராவது விடுபட்டிருந்தால் பெரிய மனதுடன் பொறுத்தருளி அறியத்தந்தால் சேர்த்துக்கொள்வேன்

Posted by Eelanathan at July 5, 2004 10:58 PM |


Keine Kommentare: